சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள சர்கார் திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமலவள்ளி என்ற கதாபாத்திரத்தில் அரசியல் வில்லியாக நடித்திருந்தார். அதைப்பார்த்து அதிர்ந்த அதிமுக தொண்டர்களும் தலைவர்களும் திரையரங்குகள் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியும் சர்கார் படத்தின் பேனர்களை கிழித்தும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து அந்த கதாபாத்திரத்தின் பெயர் உச்சரிக்கப்படும் இடத்தில் எல்லாம் கோமல என்ற இடத்தில் ம்யூட் செய்யப்படும் என அறிவித்து பிரச்சனையை ஒருவாறு சமாளித்தனர், சர்கார் படக்குழுவினர். இந்த பிரச்சனை ஓய்ந்த சில நாட்களுக்குள்ளாகவே நடிகை வரலட்சுமிக்கு இப்போது ஒரு புது பிரச்சனைக் கிளம்பியுள்ளது.
நடிகை வரலட்சுமி தற்போது மாரி 2 படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. அதை முன்னிட்டு அந்த படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகளின் கதாபாத்திரங்களின் பெயர்களை ஒவ்வென்றாக படக்குழுவினர் டிவிட்டரில் வெளியிட்டு வருகின்றனர். அதில் வரலட்சுமி நடித்துள்ள கதாபாத்திரத்தின் பெயர் விஜயா என வெளியிட்டுள்ளனர். அதைப் பார்த்த நெட்டிசன்ஸ் விஜயா என்ற பெயர் ஜெயலலிதாவின் செல்லப்பெயரான ஜெயாவை ஒத்துள்ளதாகவும் இப்போது அதிமுகவினர் என்ன செய்யப்போகிறார்கள் எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இந்த கேள்வியுடன் கூடிய வரலட்சுமியின் புகைப்படம் தற்போது வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.