‘தங்கலான்’ தயாரிப்பாளர் ரூ.1 கோடி செலுத்தும் விவகாரம்: நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Mahendran

புதன், 14 ஆகஸ்ட் 2024 (15:37 IST)
ரூ.10 கோடி கடனை செலுத்தாத விவகாரத்தில், படம் வெளியாகும் முன் ரூ.1 கோடி பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என ‘தங்கலான்’ தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின்படி ரூ.1 கோடி பணத்தை சொத்தாட்சியர் கணக்கில் செலுத்தியதாக ஸ்டுடியோ கிரீன் தரப்பில் தெரிவித்ததையடுத்து, ‘தங்கலான்’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது . இதனால் தங்கலான் பிரச்சனை இப்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது.

முன்னதாக அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை திவாலானவராக அறிவிக்க கோரி உயர்நீதிமன்ற சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது,  தங்கலான் படத்தை வெளியிடும் முன் ஒரு கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல் கங்குவா படத்தை வெளியிடும் முன் ரூ.1 கோடி டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டது.

பணம் டெபாசிட் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அந்த பணத்தை செலுத்தியுள்ளார்.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்