நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வழக்கமாக தன்னுடைய மேடைப் பேச்சுகளில் மிகவும் தன்மையாக பேசும் விஜய், நேற்று அரசியல் மேடையில் ஆவேசமாக ஆர்ப்பரித்தார்.
தனது பேச்சில் பல அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் போற்றியும் விமர்சித்தும் பேசினார். அவரின் பேச்சு தமிழக அரசியல் சூழலில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தன்னுடைய பேச்சின் நடுவே பெயர் குறிப்பிடாமல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் தாக்கிப் பேசினார். விஜய்யின் பேச்சு ஆதரவு, விமர்சனங்களைத் தாண்டி அரசியல் தளத்தில் ஒரு மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரரான சத்ய நாராயணா பேசியுள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “விஜய் இப்போது அரசியலுக்கு வந்து எதையும் சாதிக்க முடியாது. அவர் முயற்சி செய்யட்டும்” எனக் கூறியுள்ளார். ரஜினியின் அரசியல் வருகை குறித்து பல ஆண்டுகளாக விதந்தோதி பேசிவந்த சத்ய நாராயணா விஜய் குறித்து விமர்சித்து பேசியுள்ளது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.