இதையடுத்து ரஜினி, முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பதாக முடிவெடுத்து அதற்கான முன் தயாரிப்பு வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இதுவரை உறுதியாகாமல் இருந்தது. அதற்கு ரஜினி கேட்கும் சம்பளம் ஒரு காரணமாகவும் இயக்குனர் முருகதாஸ் தொடர்ச்சியாக சொல்லப்படு வரும் கதை திருட்டு குற்றச்சாட்டுகள் இன்னொரு காரணமாகவும் சொல்லப்படுகின்றன.
இதனாலேயே இந்தப் படத்தை தயாரிப்பதாக சொல்லப்பட்ட ஏ.ஜி,எஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் விலகிக் கொண்டன. ரஜினி படத்தைத் தயாரிக்கும் அளவுக்கு பொருளாதார வசதி உள்ள நிறுவனங்கள் எல்லாம் கழண்டு கொல்ல மீதமிருந்த ஒரே நிறுவனம் லைகா மட்டும்தான். ஆனால் லைகாவோடு படம் பண்ணுவதில் முருகதாஸுக்கு சிலப் பிரச்சனைகள் உள்ளன. லைகாவும் முருகதாஸோடு நல்லுறவில் இல்லை.
இதற்குக் காரணம் லைகா – முருகதாஸ்- விஜய் இணைந்த கத்திப் படம் தான். லைகா அதுதான் முதல் படம் என்பதால் எல்லாப் பொறுப்புகளையும் இயக்குனரிடம் விட்டுவிட்டு அவர் கேட்பதை எல்லாம் செய்துள்ளனர். கடைசியில் கணக்குப் பார்க்கும் போது சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாக பல மடங்கு சென்றுள்ளது கத்தி. இதனால் ரிலிஸ் சமயத்தில் லைகாவுக்கும் முருகதாஸுக்கும் பயங்கரமாக முட்டிக்கொண்டது. அப்புறம் சிலப்பல பஞ்சாயத்துகளில் அந்த பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது.
அதையடுத்து இருவருமே இணைந்து பணியாற்ற விரும்பவில்லை. ஆனால் இப்போது ரஜினிப் பட விவகாரத்தில் ரஜினி தலையிட்டு சமாதானப்படுத்தி இந்தப் படத்தை லைகா தயாரிக்க ஒத்துக்கொள்ள வைத்துள்ளார். அதனால் ரஜினி – முருகதாஸ் படத்தை லைகா தயாரிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.