போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கான நவீன வசதிகளுடன் துவங்கப்பட்டுள்ள ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோ

J.Durai

புதன், 27 மார்ச் 2024 (11:16 IST)
சென்னை வளசரவாக்கம் ராதாகிருஷ்ணன் சாலையில் நவீன வசதிகளுடன் புதிதாக அமைந்துள்ளது ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோ. திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகளில் முக்கியமான டிஐ (DI), விஎஃப்எக்ஸ் (VFX), மிக்ஸ் (Mix), டப்பிங் (Dubbing) என்கிற நான்கு கட்ட பணிகளை ஒரே இடத்தில் மேற்கொள்ளக்கூடிய நவீன ஸ்டுடியோவாக இது உருவாகியுள்ளது.
 
சுரேஷ், வெங்கடேஷ், சுந்தர் என மூன்று பேர் இணைந்து இந்த ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோவை உருவாக்கி உள்ளனர்.
 
இதன் துவக்க விழாவிற்கு இயக்குனர்கள் பேரரசு,சுப்ரமணிய ஷிவா,மந்திர மூர்த்தி, கேபிள் சங்கர், வெங்கட், ஆர். கண்ணன், மீரா கதிரவன் இசையமைப்பாளர் சத்யா, நடிகர்கள் விவேக் பிரசன்னா, தமன், விஜீத் நடிகை சனம் ஷெட்டி, தயாரிப்பாளர்கள் நந்தகோபால், ஜெயக்குமார்  ஆகியோர் வந்து விழாவினை சிறப்பித்தனர்.
 
‘லைட்ஸ்  ஆன் மீடியா’ நிறுவனர்களில் ஒருவரான சுந்தர் இந்த ஸ்டுடியோ பற்றி கூறும்போது,
 
 “கடந்த 2014ஆம் ஆண்டு டிஜிட்டல் புரமோஷனுக்காக இந்த ‘லைட்ஸ் ஆன் மீடியா’ நிறுவனத்தை துவங்கினோம். அதைத்தொடர்ந்து ஒரு கட்டத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளுக்காக விஎஃப்எக்ஸ் (VFX) கம்பெனி ஒன்று உருவாக்கப்பட்டது.
 
அதன்பிறகு போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு அத்தியாவசியமான டிஐ (DI),மிக்ஸ் (Mix), டப்பிங் (Dubbing)  போன்ற தொழில்நுட்பங்களையும் கொண்டு வந்தோம். 
 
இவை எல்லாமே முன்பு தனித்தனி இடங்களில் அமைந்திருந்தன. இந்த நான்கு தொழில்நுட்ப பிரிவுகளும் ஒரே ஸ்டூடியோவில் அமைந்தால் இந்த பணிகளுக்காக எங்களது நிறுவனத்தைத் தேடி வரும் திரையுலகினருக்கு ஒரே இடத்தில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியும் என்பதால் தற்போது வளசரவாக்கத்தில் இதற்கான புதிய ஸ்டுடியோவை உருவாக்கியுள்ளோம்.
 
இதனால் அவர்களின் சிரமம் குறைவதுடன் ஒரு படம் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு செல்லும் வரை இங்கே உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்புடனும் இருக்கும். 
 
‘அடியே’,  கிடா, பம்பர், ஜீவி-2 சேரனின் ‘ஜர்னி’ வெப்சீரிஸ் என இதுவரை 40 படங்கள், வெப் சீரிஸுகள் ஆகியவற்றுக்கு விஎப்எக்ஸ் உள்ளிட்ட பணிகளை செய்து கொடுத்திருக்கிறோம்
 
விரைவில் வெளியாக இருக்கும் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்', ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்', பிரபுதேவாவின் ‘ஜாலிலோ ஜிம்கானா’, ஹன்சிகாவின் ‘காந்தாரி’ உள்ளிட்ட முக்கிய படங்களின் VFX பணிகள் எங்களது ஸ்டுடியோவில் தான் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து பணிகளையும் தற்போது ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வசதிகள் இருப்பதால் பல தயாரிப்பாளர்கள் எங்களது ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோவை அதிகம் தேடி வர ஆரம்பித்துள்ளனர் என்றார்
 
கடந்த வருடம் வெளியான ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ என்கிற படத்தையும் இவர்கள் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்