கொரோனாவில் மறைந்த தொண்டருக்காக கமல் எழுதிய கவிதை

ஞாயிறு, 14 ஜூன் 2020 (08:54 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சமீபத்தில் மரணம் அடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டருக்காக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வீரவணக்க கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கவிதை பின்வருமாறு:
 
வீரவணக்கம்!
 
வீரவணக்கம் வீரவணக்கம்
வீழும் இவ்வுடல் என்று உணர்ந்து
விழைந்து ஈகை
செய்தவருக்கு
வீரவணக்கம்! வீரவணக்கம்!
 
கொள்ளை நோய்
நமைக்
கொன்று குவிக்கும்
வேளையிலும்
சக மானுட சேவை
கடமை
என்ற
முன் அணிகட்கு
வீரவணக்கம்!
நம்மவருக்கு வீரவணக்கம்
 
காலை என்றொரு பொழுதில்லாமல்
காலம்
உலகில்
கழிந்தது இல்லை...
 
நாளை என்ற
கனவில்லாமல்
இரவுகள்
என்றும்
கடந்தது இல்லை...
 
வேலை என்று ஏற்பது அல்ல,
வீடும்,சுற்றமும்,நாடும் எல்லாம்..
 
தோலை உரித்து ஆராய்ந்திடினும்
வண்ணம் என்பது
ஒளி மாயை தான்.
 
உள்ளே இருக்கும் உயிரூட்டங்கள்
அனைவருக்குமே பொருந்தும், எனவே
கொள்ளைநோய்
நமைக் கொல்லும்போதும்
மானுடம் மீண்டிடும்
மந்திரம் சொல்வோம்.
 
நானெனும்
அகந்தை மறந்த
மனிதர்
நிதமும் பேசும்  
உண்மைச் சொல்
அது.
 
மாயமும் இல்லை! மந்திரமில்லை!!
 
நம்மை மிஞ்சும்
ஈகையும் அன்பும்!!!
 
தாயிடம் கற்றது
போதாதென்றால்
வாழ்விடம் கற்பீர்,
வேறேது வழி?
 
வீரவணக்கம் என்றிடும் கோஷம்,
வீழ்ந்தவருக்கு மட்டும் அன்று....
நாளை
என்றொரு
நாளை நோக்கி
நடக்கும்
நம்மவர் அனைவருக்குமே....
 
நாளை நமதே
 
 
இந்த கவிதையை கமல்ஹாசன் ரசிகர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் உள்பட பலர் வைரலாக்கி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்