கோட் படத்தில் பவதாரணியின் குரலைக் கேட்டதும் இளையராஜா ஒருமாதிரி ஆகிட்டார்- கங்கை அமரன் பகிர்ந்த தகவல்!

vinoth

சனி, 6 ஜூலை 2024 (18:25 IST)
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ சில நாட்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்த பாடலை விஜய்யுடன் இணைந்து ஏ ஐ மூலமாக உருவாக்கப்பட்ட பவதாரணியின் குரலில் பாட வைத்துள்ளார்கள். இந்த பாடல் பற்றி பேசியுள்ள யுவன் “எனக்கு இந்த பாடல் மிகவும் ஸ்பெஷல் ஆனது. இந்த பாடலை நானும் வெங்கட் பிரபுவும் உருவாக்கும் போது பவதாரணி மருத்துவமனையில் இருந்தார். அவர் குணமாகி வந்ததும் அவரை பாட வைக்கலாம் என நினைத்தோம். ஆனால் ஒரு மணிநேரத்தில் அவர் இறந்த செய்தி வந்தது. அவரது குரலை நான் இப்படி பயன்படுத்துவேன் எனக் கனவிலும் நினைக்கவில்லை. இதனை உருவாக்க என்னுடன் பணியாற்றிய குழுவுக்கு நன்றி” எனக் கூறியிருந்தார்.

இது குறித்து இயக்குனர் கங்கை அமரன் சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் பேசும்போது “கோட் படத்துல பவதாரணியின் குரலைக் கேட்டதுமே நாங்க எல்லோருமே கண்கலங்கிட்டோம். அண்ணனும் (இளையராஜாவும்) ஒரு மாதிரி ஆயிட்டாரு. பவதாரணி கள்ளங்கபடம் இல்லாத நல்ல பொண்ணு. அவ இப்ப எங்க கூட இல்லன்னு நெனைக்கும்போது வருத்தமா இருக்கு. பவதாரணியை அந்த பாட்டில் வச்சது மிகப்பெரிய விஷயம்” எனக் கூறியுள்ளர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்