கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதன்மையானதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், ஸ்விசர்லந்து வீரர் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பரபரப்பான இறுதிப் போட்டியில் இங்கிலந்தின் ஆண்டி முர்ரேவை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 7வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை பெடரர் கைப்பற்றினார்.
இங்கிலந்து தலைநகர் லண்டனில், கடந்த ஜூன் 25ம் தேதி தொடங்கிய விம்பிள்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப்பில் நேற்றிரவு நடைபெற்றது. அரையிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சை வென்ற உத்வேகத்துடன் களமிறங்கிய ரோஜர் பெடரரை எதிர்த்து, இங்கிலந்து வீரர் ஆண்டி முர்ரே பலப்பரீட்சை நடத்தினார்.
பெடரரின் முதல் சர்வீசை பிரேக் செய்து, இங்கிலந்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார் முர்ரே.முதல் செட்டில் 4-4 என்ற சமநிலையில் இருந்த போது, பெடரரின் சர்வை மீண்டும் முர்ரே முறியடித்தார். அதனைத் தொடர்ந்து அந்த செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் அவர் கைப்பற்றினார். இதனால் இங்கிலந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இரண்டாவது செட் ஆட்டத்தில் இருவரும் சிறப்பாக விளையாடியதால் போட்டியில் விறுவிறுப்பு அதிகரித்தது. எனினும், இந்த செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் பெடரர் கைப்பற்றினார். மூன்றாவது செட் ஆட்டத்தில் இருவரும் ஒன்றுக்கு ஒன்று என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் இருந்த போது மழை குறுக்கிட்டது.
இறுதிப்போட்டி நடைபெறும் சென்டர் கோர்ட்டில் மழைத் தடுப்புக் கூரை இருந்ததால், அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் போட்டி தொடங்கியது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பெடரர் அதனை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
நான்காவது செட்டிலும், பெடரரின் கையே ஓங்கியிருந்தது. சுமார் 44 நிமிடங்கள் நீடித்த இந்த செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி, 7வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை பெடரர் வென்றார். இதன் மூலம் தனது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கையை 16ல் இருந்து 17 ஆக பெடரர் உயர்த்திக் கொண்டார்.