சுவாரேஸ் 2 கோல்கள்; கோப்பா அமெரிக்கா கால்பந்து இறுதியில் உருகுவே
புதன், 20 ஜூலை 2011 (10:02 IST)
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளின் அரையிறுதியில் நுழைந்த உருகுவே அணி கோப்பா அமெரிக்கா கால்பந்து அரையிறுதியில் நேற்று பெரூ அணியை 2- 0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
உருகுவேயின் நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரேஸ் ஆட்டத்தின் 53, 58வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடிக்க உருகுவே அணி இறுதியில் வென்றால் 15 முறை பட்டம் வென்ற அணி என்ற சாதனையை படைக்கும்.
தென் அமெரிக்க கால்பந்து அணிகளில் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுகளில் மிக மோசமாக இருந்த பெரூ அணி கோப்பா அமெரிக்காவில் தனது ஆட்டத்தை மேம்படுத்தியுள்ளது. இருப்பினும் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஜெஃபர்சன் ஃபாரன், கிளாடியோ பிசாரோ ஆகியோர் அணியில் இல்லை.
இடைவேளைக்கு முன்பு பெரூ அணி பலமான தடுப்பாட்டம் விளையாடியதால் கோல் அடிக்க முடியவில்லை.
53வது நிமிடத்தில் உருகுவே வீரர் டீகோ ஃபர்லான் நீண்ட தூரத்திலிருந்து தாழ்வாக அடித்த ஷாட்டை பெரு கோல் கீப்பர் ஃபெர்னாண்டஸ் இடது புறம் டைவ் செய்து தடுத்தார் ஆனால் பந்து அவரிடமிருந்து மீண்டும் வெளியே வந்தபோது சுவாரேஸ் அதனை கோலாக மாற்றினார்.
58-வது நிமிடத்தில் சுவாரேஸின் அபாரமான தனி மனிதத் திறமை வெளிப்பட்டது. நடுக்களத்திலிருந்து பந்தை எடுத்துக் கொண்டு வந்த சுவாரேஸ் படு வேகமாக இரண்டு பெரூ வீரர்களைக் கடந்து கோலாக மாற்றினார்.