உலகக் கோப்பை ரஷ்யாவிலா? - பிரிட்டன் பத்திரிக்கைகள் ஆவேசம்

வெள்ளி, 3 டிசம்பர் 2010 (16:06 IST)
2018ஆம் ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளை நடத்தும் உரிமை இங்கிலாந்துக்கு கிடைக்காமல் போனதையடுத்து அந்த நாட்டுப் பத்திரிக்கைகள் ஆவேசமடைந்துள்ளன.

2018ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகளில் இங்கிலாந்து 15மில்லியன் பவுண்டுகள் தொகையை குறிப்பிட்டிருந்தது. ஆனால் தோல்வியடைந்தது.

22 வாக்குகளில் 2 மட்டுமே இங்கிலாந்துக்குக் கிடைத்தது. அதுவும் ஒரு வாக்கு அவர்கள் நாட்டு நபரே அளித்த வாக்கு.

இதனையடுத்து ஆத்திரமடைந்த சன் பத்திரிக்கை "முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு விட்டது." அதாவது 'ஃபிக்ஸ்டு" என்று தலைப்பு கொடுத்துள்ளது.

ரஷ்யர்களுக்கு ஏற்கனவே முடிவு தெரியும் என்று சன் காய்ந்துள்ளது. ரஷ்யாவும், கே.ஜி.பி.யும்தான் உலகிலேயே இரண்டு ரகசிய உளவு நிறுவனங்கல் என்றும் கடுமையாகத் தாக்கியுள்ளது.

மேலும் பலர் உலகக் கால்பந்து கூட்டமைப்பு இங்கிலாந்துடன் கருத்தியல் ரீதியாக வேற்றுமை கொண்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

டெய்லி மிரர் பத்திரிக்கை, நேரடியாகவே "ரஷ்யா ஒரு மாஃபியா அரசு, ஊழலில் நாறிப் புழுத்து அழுகியுள்ளது" என்று எழுதியுள்ளது.

2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கத்தாருக்குக் கிடைத்திருப்பதை எள்ளி நகையாடிய டெய்லி மிரர், "கத்தார் ஒரு மத்தியகால முடியாட்சி நாடு, அங்கு பேச்சுச் சுதந்திரம் கிடையாது, இருநாடுகளுமே எண்ணெய்ப் பணத்தில் நீந்தி வருகிறது." என்று கூறியுள்ளது.

விக்கிலீக்ஸ் அமெரிக்காவை நாறடித்தது போல் ஃபீபாவையும் நாறடிக்கவேண்டும் என்றும் சில பத்திரிக்கைகள் தாக்குதல் தொடுத்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்