சீனிவாசன் பிசிசிஐ தலைவராக நீடிப்பது குமட்டுகிறது - சுப்ரீம் கோர்ட்!
செவ்வாய், 25 மார்ச் 2014 (14:53 IST)
ஐபிஎல். சூதாட்ட விவகாரத்தில் நியாயமான விசாரணை நடக்கவேண்டுமெனில் தற்போதைய தலைவர் சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு வெளியிட்டுள்ளது.
FILE
"எங்கள் கருத்தின் படி சூதாட்ட விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெற சீனிவாசன் பதவி விலக வேண்டும்" என்று நீதிபதி ஏ.கே. பட்நாயக் கூறியுள்ளார்.
முகுல் முட்கல் அறிக்கை மீதான விசாரணையில் அவர் மேற்கூறியவாறு தெரிவித்துள்ளார். மேலும்..
"என்.சீனிவாசன் பிசிசிஐ தலைவராக நீடிப்பது குமட்டலை ஏற்படுத்துகிறது, கிரிக்கெட் சுத்தமாகவேண்டுமெனில் அவர் வெளியே போக வேண்டும்" என்று மேலும் அவர் கடுமை காட்டியுள்ளார்.
மார்ச் 27ஆம் தேதி முட்கல் அறிக்கை மீதான விசாரணை மீண்டும் நடைபெறுகிறது.
பிசிசிஐ ஆதரவு வழக்கறிஞருக்கும் நீதிபதி பட் நாயக் குட்டு வைத்தார்:
"நாங்கள் ஆவணங்களைக் காட்டுகிறோம், ஒரு வழக்கறிஞராக அதனைப் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள், பிசிசிஐ தலைவர் சீனிவாசனிடம் கட்டணம் வாங்கும் ஒரு வக்கீலாக அல்ல" என்றார்.
ஒரு நேரத்தில் பிசிசிஐ நியமித்த இரண்டு நீதிபதிகள் சமர்ப்பித்த அறிக்கையையும், முட்கல் அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்த நீதிபதி பட்நாயக், "முதல் விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்ட ஒன்று என்று நாங்கள் கூறினால் அதன் பிறகு விளைவுகள் ஏற்படும், ஏன் அவர் இன்னும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்? பதவி விலகவில்லையெனில் நாங்கள் உத்தரவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. என்றார்.