சென்னையை வீழ்த்தியது பெங்களூரு; விராட் கோலி அபார ஆட்டம்
ஞாயிறு, 19 மே 2013 (11:38 IST)
FILE
நேற்று இரவு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் அபார வெற்றிக்கு விராட் கோலி சிறப்பாக விளையாடி 29 பந்துகளில் 56 ரன்கள் எடுத்ததே காரணமாகும்.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் பெங்களூர்- சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று 18 ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவது தாமதமானது. மழை நின்ற பிறகு போட்டி 11 மணிக்கு தொடங்கியது. நேரம் இல்லாததால் போட்டி 8 ஓவராக குறைக்கப்பட்டது.
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார். பெங்களூர் அணியின் கெய்ல்- விராட் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்ட நேர இறுதியில் பெங்களூர் அணி 8 ஓவருக்கு 2 விக்கெட் இழந்து 106 ரன்கள் குவித்தது.
107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சென்னை அணியின் ஹசி- விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இறுதியில் சென்னை அணி 8 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பெங்களூரு அணியைச் சேர்ந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி 29 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன் அவுட் ஆகாமல் 56 ரன் எடுத்தார். இவராலேயே பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
சென்னை, பெங்களூர் அணிகள் தனது அனைத்து லீக் போட்டியிலும் விளையாடி விட்டது. சென்னை அணி 16 போட்டியில் 11 வெற்றி, 5 தோல்வியுடன் முதலிடம் பெற்றுள்ளது. பெங்களூர் அணி 16 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று 4 ஆவது இடத்தில் உள்ளது.