காம்பீர், லஷ்மண் ஆகியோரின் அபார சதத்தால் நியூஸீலாந்து அணிக்கு எதிராக நேப்பியரில் நடந்து வந்த 2-வது டெஸ்ட் போட்டி `டிரா'வில் முடிவடைந்தது. 201 ரன்கள் குவித்த ரைடர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா-நியூஸீலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் நடந்து வந்தது.
நியூஸீலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 619 ரன்கள் குவித்து `டிக்ளேர்' செய்தது. அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆட்டம் இழந்து `பாலோ-ஆன்' ஆனது. இதனால் 314 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. கம்பீர் 14 ரன்னுடனும், டிராவிட் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. `டிரா' செய்யும் தீர்க்கமான முடிவுடன் களம் இறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் திராவிட்டும், காம்பீரும் முழுக்க முழுக்க தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமீப காலமாக டெஸ்ட் போட்டியிலும் அதிரடி காணப்பட்ட நிலையில், இந்த ஆட்டம் மீண்டும் பழைய கால டெஸ்ட் போட்டியை ஞாபகப்படுத்துவது போல் இருந்தது.
இந்திய வீரர்களின் மிகவும் நிதானமான ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை மந்தமாகவே உயர்ந்தது. ஓவருக்கு சராசரியாக 2.28 ரன்களே எடுக்கப்பட்டன. திராவிட் 11 ரன்னில் இருந்த போது அதிர்ஷ்டவசமாக ரன் அவுட் கண்டத்தில் இருந்து தப்பினார். உணவு இடைவேளையை கடந்தும் இவர்களின் நிதானம் தொடர்ந்தது. இறுதியில் நடுவரின் தவறான தீர்ப்பால் தேனீர் இடைவேளைக்கு முன்பாக இந்த இணை பிரிய நேரிட்டது.
அணியின் எண்ணிக்கை 163 ரன்களை எட்டிய போது, டிராவிட் ஆட்டம் இழந்தார். வெட்டோரி பந்து வீச்சில் ஷாட் லெக் திசையில் நின்ற ஜேமி ஹாவ் கேட்ச் செய்ததாக நடுவர் இயான் கவுல்டு அவுட் கொடுத்தார். ஆனால் அவுட் இல்லை என்பது போல் திராவிட் மிகவும் அதிருப்தியுடன் வெளியேறினார். இதன் பின்னர் டி.வி. ரீப்ளேயை பார்த்த போது பந்து பேட்டில் படாதது தெளிவாக தெரிந்தது.
திராவிட்டின் பேட் பந்தில் படாமல் அவரது பேடில் மட்டும் பட்டது, அதே சமயம் பந்தும் பேடில் மட்டுமே பட்டது. ஆனால் இரண்டு சத்தம் கேட்டதால் பந்து பேட் மற்றும் பேடில் பட்டதாக நடுவர் தவறாக நினைத்து விரலை உயர்த்தி விட்டார். ஏமாற்றத்திற்குள்ளான திராவிட் 220 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்சர், 6 பவுண்டரி அடங்கும்.
அடுத்து சச்சின் டெண்டுல்கர் களம் இறங்கினார். பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய டெண்டுல்கரின் ஆட்டத்தில் சற்று வேகம் காணப்பட்டது. மார்ட்டின் வீசிய ஒரே ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். ஓபிரையன் பந்து வீச்சில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் ஓட விட்டு உற்சாகப்படுத்தினார்.
ஆனால் மறுமுனையில் காம்பீர் அணியின் நலனை உணர்ந்து, தடுப்பு ஆட்டத்தில் அசத்திக் கொண்டிருந்தார். அவரது பொறுமைக்கு ஒரு உதாரணமாக, அவர் 83 ரன்னில் இருந்து 84-வது ரன்னுக்கு வர சுமார் 1 மணி நேரம் எடுத்துக் கொண்டார். அதாவது ஒரு ரன் எடுக்க 32 பந்துகளை செலவிட்டார். 85-வது ரன்னை தொட 11 பந்துகளை எடுத்துக் கொண்டார்.
இருப்பினும் அதன் பிறகு கொஞ்சம் வேகமாக ஆடினார். வெட்டோரி பந்தில் பவுண்டரி அடித்து தனது 5-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். அவருக்கு முன்பாக அதே ஓவரில் டெண்டுல்கர் தனது 52-வது அரை சதத்தை கடந்தார்.
4-வது நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. 7 மணி நேரத்திற்கு மேலாக களத்தில் நின்ற கம்பீர் 102 ரன்களுடனும், டெண்டுல்கர் 58 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.