இங்கிலாந்துக்கு எதிராக மொஹாலியில் இன்று துவங்கிய 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு ராகுல் திராவிட் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்களான கும்ளே, கங்கூலி இருவரும் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகவும் கௌரவமான முறையில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அணியில் உள்ள மேலும் சில மூத்த வீரர்களும் ஓய்வு பெறலாம் என ஊடகங்கள் தெரிவித்தன.
அதற்கு ஏற்றாற் போல் இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படும் ராகுல் திராவிட்டும் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். கடந்த அக்டோபர் 9ஆம் தேதி பெங்களூருவில் துவங்கிய ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 51 ரன்கள் எடுத்த அவர், அதற்கடுத்த விளையாடிய 8 இன்னிங்சிலும் மொத்தம் 76 ரன்களே எடுத்துள்ளார்.
இக்காலகட்டத்தில் மொஹாலில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் திராவிட் எடுத்த 39 ரன்களே அதிகபட்சமாகும். இந்த 8 இன்னிங்சை எடுத்துக் கொண்டால் அதில் 4 இன்னிங்சில் டிராவிட் ஒற்றை இலக்க ரன்களே (0, 3, 3, 4) எடுத்துள்ளார்.
திராவிட்டின் மோசமான ஆட்டம் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டதால், ஊடகங்களும் தங்கள் மனதிற்குத் தோன்றியபடி செய்திகளை வெளியிட்டன. இங்கிலாந்துக்குஎதிரான முதல் டெஸ்டில் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருந்து நீக்கப்படலாம் என தேர்வுக் குழுவினரைப் போல் கருத்துகளை வெளியிட்டன.
எனினும், தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்தும், அணித்தலைவர் மகேந்திர சிங் தோனியும், திராவிட் மீது முழு நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்ததுடன், ஊடகத் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை எனத் தெளிவுபடுத்தினர்.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக மொஹாலி டெஸ்ட் போட்டியில் மந்தமாக துவங்கினாலும், நிதானமாக விளையாடி தனது 26-வது டெஸ்ட் சதத்தை எடுத்த திராவிட் 136 ரன்கள் குவித்ததன் மூலம் தனக்கு எதிரான சர்ச்சைகளுக்கு அழுத்தமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.