இதெல்லாம் இருந்தால் ரேஷன் பொருட்கள் கிடையாதா? அதிர்ச்சியில் மக்கள்!

திங்கள், 31 ஜூலை 2017 (23:41 IST)
தமிழக அரசு வழங்கி வரும் ரேஷன் கார்டு ஒருசிலருக்கு மட்டும்தான் அடையாள அட்டை. பலருக்கு அதுதான் வாழ்வாதாரம். இந்த நிலையில் ரேஷன் கார்டுக்கு தமிழக அரசு ஒருசில நிபந்தனைகள் விதித்துள்ளதாகவும், இது அரசிதழிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிவந்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 



 
 
1. 3 அறைகளுக்கு மேல் உள்ள கான்கிரீட் வீட்டை கொண்டவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை
2. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும் ரேஷன் பொருட்கள் இல்லை
3. நான்கு சக்கர மோட்டார் வாகனம் வைத்துள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை
4. 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை
5. ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் இருந்தால் ரேஷன் பொருட்கள் இல்லை
 
மேற்கண்டவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்பது அமல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் கிட்டத்தட்ட 50% பேர்களுக்கும் மேல் ரேஷன் பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்படும். இந்த நிலையில் இதுகுறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்  கூறியதாவது: 'சில பத்திரிகைகளில் வெளியான செய்தியை அடுத்துதான் நிருபர்களை அழைத்து இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தேன். ரேஷன் கடைகளில் செயல்படுத்தப்படும் பொது விநியோக திட்டம் மூலம் அனைவருக்குமான உணவு பாதுகாப்பினை தமிழகம் வழங்குகிறது. எனவே, அனைத்துத் தரப்பினரும் வழக்கம்போல ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்கலாம். ரேஷன் பொருள்கள் வாங்குவதில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.
 
மத்திய அரசின் திட்டமான, தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தை கடைசியாக செயல்படுத்தியது தமிழ்நாடு. அது மத்திய அரசு கொண்டு வந்த திட்டம். சில நிபந்தனைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்ட பின்னர்தான் உணவு பாதுகாப்புத் திட்டத்தை தமிழகத்தில் ஏற்றோம். எனவே, அது குறித்து வெளியிடப்படும் அறிவிப்புகள் தமிழக அரசிதழில் வந்தாலும் அது நடைமுறைக்குக் கொண்டுவரப்படாது. பழைய விலையிலேயே ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்கள் வழங்கப்படும். விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் என இரண்டு திட்டங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அரசிதழில் சட்டத்திட்டங்கள் விதிக்கப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருள்களில் எந்த மாற்றமும் இருக்காது' என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்