தலைவரின் ஆசியோடு ஒருகை பாப்போம்: உதயநிதி ஆவேசத்தின் காரணம் என்ன?
திங்கள், 8 ஜூன் 2020 (17:39 IST)
10 ஆம் வகுப்பு தேர்வு குறித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15 ஆம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தீர்ப்பு வரும் 11 ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவரணிச் செயலாளர் எழிலரசன் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அதில், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்தவித முன்னேற்பாடுகளைச் செய்யாமல் வரும் 15-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை தேர்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
பாதிப்பு குறைவாக இருக்கும்போது ஊரடங்கை அமல்படுத்தி, பாதிப்பு அதிகமாக இருக்கும்போது ஊரடங்கை முற்றும் தளர்த்தி அடிப்படை மருத்துவ அறிவுக்கு எதிராகச் செயல்படும் ஒரே அரசு மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும்தான்.
கொரானாவால் மக்கள் கொத்துக்கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் சூழலில் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்வதே நியாயமான செயலாக இருக்க முடியும்.
எனவே, பெற்றோர்-மாணவர்-ஆசிரியர்களின் நலனை கருத்தில்கொண்டு 10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்கள். ‘நடத்தியே தீரவேண்டும்’ என்றால் கொரோனா தீவிரம் குறைந்தபிறகு நடத்துங்கள். விடாப்பிடியாக நின்றால் கழக தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற்று உங்களை களத்தில் சந்திப்போம் என தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.