பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பின் முழு விவரங்கள் இதோ:
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் ரெயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சியில் இருந்து மாலை 6 மணிக்கு விழுப்புரம் வரை செல்லும் திருச்சி - விழுப்புரம் மெமு ரெயில் (வண்டி எண்: 06892) வருகிற 22-ந்தேதி மற்றும்24-ந்தேதி விருத்தாசலம் வரை மட்டுமே இயங்கும்.
இதேபோல், விழுப்புரத்தில் இருந்து காலை 5.10 மணி அளவில் திருச்சி வரை இயங்கும் விழுப்புரம் - திருச்சி மெமு ரெயில் (வண்டி எண்: 06891) வருகிற 23-ந்தேதி மற்றும் 25-ந்தேதிகளில் விருதாச்சலத்தில் இருந்து காலை6 மணிக்கு புறப்படும். இந்த ரெயில்கள் விழுப்புரம் - விருத்தாசலம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
கன்னியாகுமரியில் இருந்து திருச்சி வழியாக உத்தர பிரதேச மாநிலம் பெனாரஸ் வரை செல்லும் கன்னியாகுமரி - பெனாரஸ் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16367) வருகிற 26-ந்தேதி கடலூர், விருத்தாசலம், விழுப்புரம் வழியாக மாற்றுப்பாதையில் செல்லும்.
திருச்செந்தூரில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு திருச்சி வழியாக சென்னை எக்மோர் வரை செல்லும் திருச்செந்தூர் - சென்னை எக்மோர் அதிவிரைவு வண்டி (வண்டி எண்: 20606) வருகிற 22, 24, 26-ந்தேதிகளில் 2.10 மணி நேரம் தாமதமாக இரவு 10.35 மணிக்கு புறப்படும்.
நாகர்கோவில்- தாம்பரம் வாரந்திர சிறப்பு ரெயில் வருகிற 22, 23-ந்தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து 1.15 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும். மேலும் சென்னை எக்மோர் - மதுரை தேஜஸ் ரெயில் (வண்டி எண்: 22671) சென்னையில் இருந்து வருகிற25-ந்தேதி 1.40 மணிநேரம் தாமதமாகவும், மறுமார்க்கமாக மதுரை - சென்னை எக்மோர் ரெயில் (வண்டி எண்: 22672) மதுரையில் இருந்து1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும்.