கதறிய சுவாதி; விடாமல் சுற்றிய பகை: மர்மங்கள் நிறைந்த கொலையின் பின்னணி

புதன், 13 ஜூலை 2016 (16:19 IST)
சுவாதி என்ற இளம்பெண் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்து 18 நாட்கள் ஆகியும் இந்த பரபரப்புக்கு இன்னமும் முடிவு வரவில்லை.


 
 
குற்றவாளியை பிடிக்க மிகவும் சிரமப்பட்ட இந்த வழக்கில் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார்.
 
கைது செய்யப்பட்ட பின்னரும் இந்த வழக்கின் பரபரப்பு அடங்கவில்லை. இந்த கொலைக்கு காரணம் என்ன என்பது தான் தற்போது பெரும் குழப்பமாக உள்ளது. ராம்குமார் தான் கொலை செய்தார், ஒருதலை காதல் தான் காரணம் என காவல்துறை தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்தன.
 
ஆனால், உண்மையான குற்றவாளி ராம்குமார் இல்லை. வேறு யாரையோ காப்பாற்ற ராம்குமார் பலிகடா ஆக்கப்படுகிறார். ராம்குமார் இந்த கொலையை செய்யவில்லை, காவல்துறை இந்த வழக்கை விரைந்து முடிக்க ராம்குமாரை நிரந்தரமாக சிறையில் வைக்க முயற்சிப்பதாக புகார்கள் வருகின்றன.
 
இந்நிலையில் ராம்குமாருக்காக முதலில் ஜாமின் கேட்டு வாதாடிய வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தன்னிடம் ஒரு வயதான வழக்கறிஞர் ஒருவர் கூறியதாக ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
 
சுவாதி பெங்களூருவில் வேலை செய்தபோது அங்கு ஏற்பட்ட ஒரு தகராறு காரணமாக, அவரது குடும்பம் அங்கிருந்து இடம் பெயர்ந்து சூளைமேடு வந்தனர்.
 
சுவாதி தனது வீட்டில் இருந்து தினமும் ஒரு ஆட்டோவில் வழக்கமாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு செல்வார். ஆட்டோவில் சுவாதி செல்லும் போது “நீங்க கேட்ட லேப்டாப்பை கொடுத்துட்டேன். பென் ட்ரைவையும் கொடுத்துட்டேன், இனியும் உங்களுக்கு என்ன பிரச்சினை, என்னை நிம்மதியாக இருக்க விடுங்க” என்று செல்போனில் சத்தமாய்ப் பேசியபடியே செலவார். ரயில்வே காவலர்களிடம் இந்த தகவலை அந்த ஆட்டோ ட்ரைவர் கூறியுள்ளார்.
 
சுவாதியை செல்போனில் மிரட்டியவர் யார்?, அவருக்கும் இந்த கொலைக்கு தொடர்பு இருக்கிறதா என பல கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில் நேற்று புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்த வழக்கறிஞர்களில் ஒருவர் கூறும் போது, இந்த கொலை ராம்குமார் செய்தார் எனவும், அவர் இந்த கொலையை செய்ய ஒரு கருவியாக செயல்பட்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளார். ராம்குமார் கூலிப்படையாக செயல்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் எழுப்புகிறார்.
 
ராம்குமாரின் சார்பாக இருக்கும் வழக்கறிஞரே இந்த தகவலை சொல்லியிருக்கிறார். காரணம் சிறையில் ராம்குமாரிடம் அவர்கள் வைத்த கேள்விகளை ராம்குமாரால் எதிர்கொள்ள முடியவில்லை. முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறுகிறார். இதனால் இவர் சுவாதியை கொல்ல வேறு யாராலோ நியமிக்கப்பட்ட நபர் என அவர் வலுவான சந்தேகத்தை எழுப்புகிறார்.
 
எதை வைத்து அந்த வழக்கறிஞர் இந்த முடிவுக்கு வந்தார் என்றால், சென்னை வந்த நோக்கத்தைப் பற்றி தெளிவான பதில் ராம்குமாரிடம் இல்லை. அரியர் எக்ஸாம் எழுத சென்னை வந்தேன் என்றார். நெல்லையிலே அரியர் எக்ஸாம் எழுத முடியுமே என கேட்டால், கவர்மெண்ட் எக்ஸாம் எழுத வந்தேன் என்கிறார்.
 
சென்னைக்கு யார் அழைத்து வந்தார் என்று கேட்டால், பதில் இல்லை. காவல்துறை கைது செய்தபோது, நானே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டேன் என்கிறார். பின்னர் காவல்துறையுடன் வந்தவர்கள் அறுத்தார்கள் என்கிறார். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என சுவாதியோடு எந்தத் தொடர்பும் இல்லை என்றார். சுவாதியைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் தலையைக் கீழே குனிந்து கொள்கிறார் ராம்குமார்.
 
இவ்வறு ராம்குமாரின் செயல்பாடுகள் அவரது வழக்கறிஞருக்கே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ராம்குமார் சென்னை வந்ததே சுவாதியை கொலை செய்யும் நோக்கத்திற்காகவே. அவருக்கும் சுவாதிக்கும் இடையே எந்தவித பகையோ காதல் விவகாரமோ இருக்கவில்லை. சுவாதிக்க இருந்த ஒரே பகை அவரை விடாமல் சுற்றிய பெங்களூரு விவகாரமே என கூறுகின்றனர். எனவே பெங்களூரு மனிதர் ராம்குமாரை ஏவி விட்டு சுவாதியை கொலை செய்திருக்கலாம் என சந்தேகங்கள் கிளம்புகின்றன.
 
ராம்குமாரும் வழக்கறிஞர்களிடம் உண்மையை சொல்லாமல் எதையோ மறைக்கிறார். காவல்துறையும் இந்த வழக்கில் சுவாதி பற்றிய சில உண்மைகள் வெளியே வரக்கூடாது என்பதற்காக ராம்குமாரோடு இந்த வழக்கை முடித்துக்கொள்ள அவசரம் காட்டுகிறது எனவே இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றும் போது சுவாதி கொலைக்கான உண்மையான காரணம், யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது. மற்றும் இதில் புரியாத புதிராக உள்ள பெங்களூரு விவகாரம் வெளியே வரும் என கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்