இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுப்பது? பேனரால் பலியான இளம்பெண் குறித்து ஸ்டாலின்

வியாழன், 12 செப்டம்பர் 2019 (20:42 IST)
சென்னை பள்ளிக்கரணை சாலையில் சுபாஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் ஒருவர் தனது இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் திடீரென அவர் மீது சரிந்தது. இதனால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த சுபாஸ்ரீ, சாலையில் கீழே விழுந்தபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதால் அவர் பரிதாபமாக பலியானார். 
 
 
இந்த சம்பவம் காரணமாக பேனர் வைத்த அதிமுகவினர்களை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும் இந்த பொறுப்பற்ற செயலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இதுகுறித்து தனது கோபமான கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
 
 
அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது என்றும் அவருக்கு என் இரங்கல் என்றும் டுவீட் செய்துள்ள ஸ்டாலின், ‘அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
 
 
பேனர் வைத்ததால் நடந்த விபத்து குறித்து முக ஸ்டாலின் இவ்வளவு ஆக்ரோஷமாக கருத்து தெரிவித்திருந்தாலும் திமுகவின் பல கூட்டங்கள் நடைபெறும்போது இதே மாதிரி தான் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை முக ஸ்டாலின் கண்டுகொள்ளாதது ஏன்? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்