கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஓடும் ஆட்டோவில், 18 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வெளியே, 18 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண் அலறல் சத்தம் எழுப்பியதை கேட்ட ஒருவர், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கியதன் மூலம், அவர் காப்பாற்றப்பட்டதாக அண்ணாமலை தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை நடப்பது பயங்கரமான உண்மையாக மாறிவிட்டதாகவும், போதைப் பொருள் எளிதில் அணுகக்கூடியதாக உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்தில் என்.டி.பி.எஸ். சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,122 என்றும், 2021ஆம் ஆண்டு மட்டும் 9,632 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கஞ்சா உட்பட போதைப்பொருள் விற்பனை தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதாகவும், ஆனால் கைது எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். போதைப்பொருள் வியாபாரிகளை சுதந்திரமாக நடமாட வைக்க திமுக அரசு உறுதியாக இருக்கிறது என்றும், பாதுகாப்பு அதிகாரிகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குள் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ என்றும் அவர் கவலை தெரிவித்தார்.