கடந்த வாரம் முழுவதும் அதிமுக வில் ஓபிஎஸ்-ஸுக்கும் ஈபிஎஸ்-ஸுக்கும் இடையே முட்டல் மோதலாக இருந்து வந்துள்ளது. காரணம் ஓபிஎஸ்-ஸின் தம்பி ஓ ராஜாவை ஆதிமுக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் – ஸின் துணையோடு நீக்கியது. இதனால் கடுப்பான ஓபிஎஸ் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக டெல்லிக்குத் தகவல் அனுப்பியிருக்கிறார். மேலும் உங்கள் பேச்சைக் கேட்டுதான் கட்சிகள் இணைப்பை ஏற்றுக்கொண்டேன். ஆனால் கட்சியில் எனது அதிகாரங்கள் குறைந்துகொண்டே வருகின்றன என தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதன் பிறகு டெல்லியில் உள்ளவர்கள் தலையிட்டுதான் ஓ ராஜா விஷயம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதன் பிறகே எம்.ஜி.ஆர். நினைவு நாளுக்கு இருவரும் சேர்ந்து வந்திருக்கின்றனர். இது போல அடிக்கடி அதிமுக வில் இருவருக்கும் இடையில் அதிகாரப்போர் உருவாவதை விரும்பாத டெல்லித் தலைமை அதிமுக வினரிடம் பேசுமாறு பொன் ராதாகிருஷ்ணனின் கூறியதாகவும் அதனாலேயே அவர் நேற்று திடீரென எடப்பாடியை சந்தித்ததாகவும் செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளன.
இந்த திட்டமிடாத சந்திப்பில் பொன்னார் எடப்பாடியிடம் ‘தேர்தல் நேரத்தில் இது போன்ற உட்கட்சிப் பூசல்கள் தேவையில்லாத ஒன்று. ஒவ்வொரு முறையும் உங்களை சமாதானப்படுத்திக் கொண்டே இருப்பது எங்கள் வேலை இல்லை. ஏற்கனவே நமக்கு மக்கள் மனதில் நல்ல பெயர் இல்லை. இப்போது இது போன்ற பிரச்சனைகள் மேலும் அவப்பெயரியே உருவாக்கும். இதனால் தேர்தலை மனதில் கொண்டு ஒற்றுமையாக இருங்கள்’ எனக் கடிந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.