மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை: குட்கா விவகாரத்துக்கு விஜயபாஸ்கர் பதில்!

வெள்ளி, 30 ஜூன் 2017 (09:28 IST)
தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, பான் மசால போன்ற புகையிலை பொருட்களை சட்டத்தை மீறி விற்பனை செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக செய்திகள் வெளியானது.


 
 
இதனை தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காததால் வெளிநடப்பு செய்தனர். மேலும் குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்ய லஞ்சம் பெற்ற அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யவும் கோரிக்கை வலுத்து வருகிறது.
 
தமிழக சட்டசபையிலும் இந்த விவகாரம் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது தரப்பு விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
 
அதில், குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலைப் பொருள்கள் குறித்து உண்மைக்கு மாறான பல கருத்துகள் எனக்கு எதிராக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஒரு சில நபர்களால் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.
 
புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்றுநோய்களைத் தடுக்கும் வண்ணம், புகையிலை மற்றும் நிக்கோட்டினை சேர்மான பொருளாகக்கொண்ட குட்கா, பான் மசாலா மற்றும் வேறு எந்த சுவைக்கும் பொருளையும் தயாரிக்கவும், சேமிக்கவும், விற்பனை செய்யவும் தடைவிதித்து 23.05.2013 அன்று தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது.
 
குட்கா, பான் மசாலா போன்றவற்றுக்கான தடையைச் சீரிய முறையில் நடைமுறைப்படுத்த ஏதுவாக அந்தந்த மாவட்ட ஆட்சியரின் தலைமையில் பல்வேறு அதிகாரிகள், அலுவலர்களை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த கண்காணிப்புக் குழுவின் ஒத்துழைப்புடன் உணவு பாதுகாப்புத்துறை எடுத்த நடவடிக்கையின் பயனாக ஏப்ரல் 2017 வரை தமிழகத்தில் 544.59 டன்னுக்கும் அதிகமான குட்கா, பான் மசாலா போன்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
 
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 2017 வரை 6,17,997 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 81,796 கடைகள் தடை செய்யப்பட்ட உணவுப் பொருள்களை விற்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 15.38 கோடி ரூபாய் மதிப்புள்ள 544.59 டன் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
 
குட்கா மற்றும் பான் மசாலாவின் மீதான தடையாணை 23.05.2017 முதல் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சில நாளேடுகளிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள மாதவ்ராவ் என்ற நபரை நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே இதுவரை சந்தித்தது இல்லை.
 
என்னைப் பிடிக்காத சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தவறாகப் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற பல பிரச்னைகள் எனது அரசியல் வாழ்வில் ஏற்பட்டபோதும் அவற்றையெல்லாம் கடந்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறேன். எனக்கு மடியில் கனமில்லை. எனவே, வழியில் பயமில்லை. இந்தப் பிரச்னையையும் சட்டரீதியாக எதிர்கொள்வேன் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்