காலம்காலமாக காதலை வெளிப்படுத்த பலரும் பல விஷயங்களை செய்வது உண்டு. க்ரீட்டிங் கார்டு, கீசெயினில் படம் வரைவது, தங்களது அன்பானவர்களின் உருவத்தை ஓவியமாக வரைந்து தருவது, டாட்டூ குத்திக் கொள்வது என பல வழிகளில் பலரும் அன்பை, காதலை வெளிப்படுத்துகின்றனர். அதில் தற்போது ஆபத்தான முறையில் ப்ளட் ஆர்ட் என்னும் முறை தோன்றியுள்ளது.
இதில் தங்களது ரத்தத்தை எடுத்து தங்களுக்கு பிடித்தவர்களின் ஓவியத்தை அந்த ரத்தத்தாலேயே வரைந்து பரிசாக அளிக்கின்றனர். இதுபோன்ற Blood Art வரைந்து தருவதற்கான நிறைய கடைகளும் ஆங்காங்கே செயல்பட தொடங்கியுள்ளன. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இவ்வகையான ஆபத்தான Blood Art தமிழகத்தில் தடை செய்யப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அவர் “ரத்தம் ஒருவரின் உயிரை காப்பாற்றும் உன்னதமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த ரத்தத்தை வீணாக்கி, சுகாதாரமற்ற முறையில் இவ்வாறு ஓவியங்கள் வரைவது ஆரோக்கியமான விஷயம் அல்ல. சென்னை தி.நகரில் செயல்பட்ட ப்ளட் ஆர்ட் கடைகளில் சோதனை மேற்கொண்டு ரத்தக்குப்பிகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கடைகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த ப்ளட் ஆர்ட் தமிழகத்தில் தடை செய்யப்படுகிறது. மீறி செயல்படும் ப்ளர் ஆர்ட் செண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்