பாஜகவுக்கு தேர்தல் புகட்டும் பாடம் என்ன? இன்றே கணித்த கார்த்தி சிதம்பரம்!
புதன், 2 பிப்ரவரி 2022 (10:22 IST)
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் கார்த்தி சிதம்பரம்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் கூட்டணி உடன்பாடு குறித்தும் தேர்தல் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டது மனநிறைவை அளிக்கிறது.
அதே சமயத்தில் இந்த தேர்தலில் அதிமுக தங்களது கூட்டணியில் பாஜகவை சேர்க்காமல் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டுள்ளது. பாஜகவோடு கூட்டணி வைத்ததனால் தான் அதிமுக தோல்வி அடைந்தது என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளார்கள்.
பாஜகவால் சிறுபான்மையினர் மற்றும் தமிழர்களின் வாக்குகள் தங்களுக்கு வரவில்லை என்பதை அதிமுகவினர் உணர்ந்து உள்ளனர். ஆனால் இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதோடு பாஜகவால் வரும் பாதகங்களை புரிந்து கொள்ள மட்டுமே இத்தேர்தல் உதவுமே தவிர இத்தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார்.