தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான ஊட்டியில் இயங்கி வரும் மலை ரயில் சேவை டிக்கெட் கட்டணம் நபருக்கு 3 ஆயிரமாக உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரயில்வே நிர்வாகம் இடையே சிலகாலம் மட்டும் தனியாருக்கு ரயில் வாடகை விடப்பட்டதாகவும் அப்போது ஒட்டப்பட்ட கட்டண ஸ்டிக்கர்கள் அகற்றப்படாததால் இந்த குழப்பம் நிகழ்ந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இதுகுறித்து பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “பண்டிகை நாட்களை ஒட்டிய விடுமுறை தினங்களில்தான் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள். கூட்டம் கூடும் தினங்களில் ஊட்டி மலை ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து இயக்கினால், டிக்கெட் விலை பன்மடங்காகத்தான் இருக்கும்.” என கூறியுள்ளார்.
மேலும் “எந்தச் சிறிய கொண்டாட்டமும், குதூகலமும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் எனும் நிலைமையை ரயில்வே உருவாக்கக் கூடாது” என கேட்டுக்கொண்டுள்ளார்.