பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 636 காளைகள் பங்கேற்கின்றன. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. வீடுகள் தோறும் புத்தாடை உடுத்தி பொங்கலிட்டு அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொண்டு கொண்டாடுகின்றனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றவை. ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக கடந்த ஒரு வாரமாக முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வந்தனர். அவனியாபுரத்தில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டில் 636 காளைகளும் 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.
ஜல்லிக்கட்டை முன்னிட்டு மருத்துவக் குழு, கால்நடை மருத்துவக் குழு, மேலும் காயம் ஏற்படுபவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.