தமிழகம் முழுவதும் பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகியப் பண்டிகைகளின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொன்று தொட்டு வரும் பழக்கம். ஆனால் இடையில் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகள் துன்புறுத்துவதாக பீட்டா போன்ற அமைப்புகள் வைத்த குற்றச்சாட்டால் நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. அதற்கு எதிராக மக்கள் தமிழகம் முழுவதும் போராடி தடையை நீக்கி அரசை புதிய சட்டமியற்ற வைத்தனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக அதற்குத் துளியும் சம்மந்தமில்லாத சென்னை மக்களும் ஜாதி பாகுபாடு பார்க்காமல் போராடினர். ஆனால் ஆண்டாண்டு காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஜாதியப் பாகுபாடுகள் இருந்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தவும் கலந்துகொள்ளவும் அதிகாரம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. அதை உறுதிப்படுத்தும் விதமாக மதுரை அவனியாபுரத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டதை அடுத்து சர்ச்சை ஆரம்பமானது.
இது சம்மந்தமாக அலங்காநல்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைவரையும் இணைத்து ஜல்லிக்கட்டு விழாக்குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும். இதனை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என்ற கோவிந்தராஜின் வாதத்தை ஏற்றனர்.