மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் கூறி இருந்தார்.
இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி ஜெயவேல் முன்பு எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜர் ஆனார்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுப்பதாக தெரிவித்த எடப்பாடி, அவதூறு வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டார்.