நீலகிரி மாவட்டம் மாவநல்லா பகுதியில் ஊர்ப்பகுதிக்குள் வந்த காட்டு யானை மீது ஆசாமிகள் சிலர் தீ வைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானையை விரட்ட டயரில் தீ வைத்து யானை மீது வீசியதாக கூறப்படுகிறது. இதனால் டயர் உருகி யானை மீது ஒட்டிக்கொண்டதால் யானைக்கு அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டு இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியில் சில ஆண்டுகளாக 40 வயது ஆண் யானை ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. அதனால் பொதுமக்களுக்கும் அதைக் கண்டு பெரிய அளவில் பயப்படவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் முந்தைய சம்பவத்துக்குப் பிறகு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கலாம் என அஞ்சிய வனத்துறை அதிகாரிகள், அந்த யானையைக் கண்டுபிடித்து பழங்களை அதன் முன்னர் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக முதுமலைக்காட்டை நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர். இதுவரை 7 கிலோ மீட்டர் தூரம் கடந்துள்ள நிலையில் இன்னும் 7 கிலோ மீட்டர் கடந்தால் முதுமலைக் காட்டில் யானை விடப்படும் என சொல்லப்படுகிறது.