இந்தியாவில் உள்ள முக்கியமான விமான நிலையங்களில் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையம். தமிழகத்திலிருந்து மலேசியா, துபாய், அமெரிக்கா என பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவில் உள்ள திருச்சி, டெல்லி, கல்கத்தா போன்ற நகரங்களுக்கும் இங்கிருந்து விமான சேவைகள் செயல்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விமான போக்குவரத்து சேவைகளால் சென்னை விமான நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
சென்னை விமான நிலையத்திற்கு வந்து போகும் விமானங்களின் அளவுகளுக்கேற்ப விமான இறங்கு தளங்களும், நிறுத்தி வைப்பகங்களும் குறைவாகவே உள்ளன. இதனால் விமான சேவையில் பல்வேறு குழப்பங்களும், தாமதங்களும் ஏற்படுகின்றன. இதை தவிர்க்கும் விதமாக சென்னையில் இரண்டாவதாக புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்திருந்தது. இதற்காக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கான இடம் தேடும் பணி தொடங்கியது.
ஒரு விமான நிலையம் அமைக்க 2000 ஏக்கர் முதல் 2500 ஏக்கர் வரை நிலப்பரப்பு தேவைப்படும் என்பதால் சென்னைக்கு அருகாமையில் உள்ள திருப்போரூர், செய்யாறு, வல்லத்தூர், தோடூர், மதுரமங்கலம் மற்றும் மாப்பேடு ஆகிய ஊர்கள் தேர்வு பட்டியலில் உள்ளன. முதலில் ஸ்ரீபெரும்புதூர் தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டது. அங்கு குடியிருப்பு பகுதிகள் அதிகம் இருப்பதால் விமான நிலையத்திற்கு தேவையான இடம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது.