காதலியை தேடி வீட்டிற்கு சென்ற காதலன்: கோவிலுக்குள் வைத்து துடிதுடிக்க படுகொலை செய்த தந்தை

வியாழன், 6 அக்டோபர் 2016 (16:02 IST)
திருநெல்வேலி அருகே காதலியை தேடி வந்த காதலனை, பெண்ணின் தந்தை கோவிலுக்குள் வைத்து துடிதுடிக்க வெட்டி படுகொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 
திண்டுக்கல் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சின்னக்கண்ணு மகன் சிவகுருநாதன் (27). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர், மருந்துக் கம்பெனி ஒன்றின் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். 
 
அதேபோல், நெல்லை அருகே உள்ள மேல இலந்தைக்குளத்தை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள் (58) என்பவரது மகள் கஸ்தூரி (26). செவிலியர் பட்டதாரியான இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள நெய்க்காரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பணி கிடைத்ததை அங்கு பணியாற்றி வந்துள்ளார்.
 
இதனையடுத்து, கஸ்தூரி பணிபுரியும் சுகாதார நிலையத்தில் உள்ள டாக்டரை சந்திக்க சிவகுருநாதன் வந்துள்ளார். இதுபோல, அடிக்கடி அவர் வந்து சென்றபோது கஸ்தூரிக்கும், சிவகுருநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த பழக்கம் காதலாக மாறி உள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளனர்.
 
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த காதல் விவரம் கஸ்தூரியின் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இதற்கு கஸ்தூரியில் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இதற்கிடையில், கஸ்தூரிக்கு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் பணியிட மாற்றம் பெற்று வந்து சேர்த்தனர். ஆனாலும், சிவகுருநாதன் செங்கோட்டைக்கு வந்து கஸ்தூரியை சந்தித்து வந்துள்ளார். இதனை அறிந்த கஸ்தூரியின் பெற்றோர் கஸ்தூரிக்கி வேலைக்கு அனுப்ப மறுத்துள்ளனர்.
 
இந்நிலையில், நேற்று சிவகுருநாதன் கஸ்தூரியின் வீட்டிற்கே சென்று அவரது பெற்றோர்களிடம் கஸ்தூரியை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு சிவகுருநாதன் கேட்டுள்ளார். ’சரி, இது குறித்து கோவிலில் வைத்து முடிவு செய்வோம்’ என கூறி சிவகுருநாதனை கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
 
அப்போது தனது மகளை சிவகுருநாதனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்று அவரது தந்தை லட்சுமண பெருமாள் கூறியுள்ளார். ஆனால், தான் கஸ்தூரியுடன் செல்வதற்காகத்தான் வந்துள்ளேன். எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என சிவகுருநாதன் தொடர்ந்து வற்புறித்தி உள்ளார்.
 
இதனால், ஆத்திரமடைந்த லட்சுமண பெருமாள் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், சிவகுருநாதனை லட்சுமண பெருமாள் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், சிவகுருநாதன் கோவில் மண்டபத்திற்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
 
அங்கிருந்து, லட்சுமண பெருமாள் வெட்டிய அரிவாளுடன் ஊருக்குள் நடந்து சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
 
பின்னர், கோவிலில் பிணமாக கிடந்த சிவகுருநாதனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமண பெருமாளை கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்