இந்த நிலையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் வி.ஆர் மாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக சென்று செயலிழக்க வைக்குமாறும் கூறி காவல்துறைக்கு மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட மோப்பநாய் பிரிவு போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வி.ஆர் மாலுக்கு சென்று ஒவ்வொரு கடையாக சோதனை நடத்தினர்.
திடீர் சோதனையால் பொதுமக்கள் யாரும் பயப்படக் கூடாது என்பதற்காக ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து மாலில் இருந்து அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். தொடர்ந்து மால் முழுவதும் சோதனை நடத்திய நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது. இதையடுத்து மின்னஞ்சல் முகவரியை வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபகாலமாக சென்னையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோயில்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.