ஓவர் நைட்டில் நல்லவர்களான அரசியல்வாதிகள்: பேனர் கல்சருக்கு முற்றுப்புள்ளி!

வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (13:22 IST)
சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இளம்பெண் மரணமடைந்த்தால் அரசியல் கட்சி தலைவர்கள் இனி பேனர் வைக்க கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளனர். 
 
பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஒருவர் வைத்த பேனர் விழுந்ததில் ஸ்கூட்டரில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் கீழே விழுந்தார். அவர் மேல் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
 
நேற்று நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது வழக்காக பதியப்பட்டுள்ள நிலையில் இன்று இந்த பெண்ணின் மரணத்தை கையில் எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசை கடுமையாக விமர்சித்தது. 
அதோடு சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள கட்சி கொடிகளை உடனே அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது தொண்டர்களும், நிர்வாகிகளும் பேனர்களை வைக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளது. 
 
அதிமுகவை சேர்ந்த மாஃபா பாண்டியராஜன், அதிமுக கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பேனர் வைக்க கூடாது என வலியுறுத்துவோம் என தெரிவித்துள்ளார். மேலும் மெரினாவில் வைக்கப்பட்டுள்ள அதிமுக கொடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன.

மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்க கூடாது. கட்சி நிகழ்ச்சிகள், இல்ல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைப்பதை நிறுத்த வேண்டும் என அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அதனை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், திமுக நிகழ்ச்சிக்காக கட்சியினர் யாரும் பேனர் வைக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். மீறி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நிகழ்ச்சியோ, கூட்டமோ எதுவாக இருந்தாலும் பேனர் வைத்தால் நான் பங்கேற்க மாட்டேன் என கண்டிப்புடன் அறிவித்துள்ளார்.  
தமிழகத்தின் இரு பெரு கட்சிகள் இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், இவர்களை தொடர்ந்து அமமுக பொதுச்செய்ளாலர் டிடிவி தினகரன், அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பேனர்களை வைக்க வேண்டாம். இளம்பெண் சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 
பாதுகாப்பாக மக்களுக்கு இடைச்சல் இல்லாத வகையில், உரிய அனுமதியுடன் பேனர் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பேனரே வைக்க வேண்டாம் என கூறியிருப்பது பேனர் கல்சரின் மாற்றத்திற்கு வித்திடும் என எதிர்ப்பார்ப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்