கிடா விருந்து, ராஜ உபசாரம்! விழாவை சிறப்பிக்க வந்து, மதுரை கமிஷனரிடம் வசமாக சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்!
சனி, 19 ஜனவரி 2019 (11:24 IST)
ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்றதாக கூறி, பலரையும் நம்ப வைத்து காவல்துறை அதிகாரிகளிடம் வாழ்த்து பெற்ற நபர், மதுரை மாநகரக் கமிஷனர் டேவிட்சன் தேவஆசிர்வாதத்திடம் வாழ்த்து பெற வந்த போது வசமாக சிக்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே சின்னக்கலந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 22). இவரது தந்தை ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆவார். யுவராஜ் ஐஏஎஸ் தேர்வில் 74வது இடத்தை பிடித்து தேர்வானதாக கூறியுள்ளார். இதை தீர விசாரிக்காமல் ஊடகங்களும் செய்தியாக்கிவிட்டன. இதை தனக்கு சாதகமாக்கி கொண்ட யுவராஜ், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தன்னை ஐஏஎஸ் தேர்வில் வென்றதாக பரப்பினார். இதனால் சென்ற இடமெல்லாம் சிறந்த மரியாதை கிடைத்தது, பல ஆயிரங்களை வாங்கி கொண்டு, பள்ளி கல்லூரிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றினார்.
இந்நிலையில், இவரது நண்பர் ஒருவர் திருமங்கலத்தில் கிடா விருந்து நடத்தியுள்ளார். இந்த விழாவை சிறப்பிக்க வந்த யுவராஜை சில காவல்துறை அதிகாரிகள் வாழத்தினர். இதையடுத்து விருந்துக்கு வந்த சில காவல்துறை அதிகாரிகள் மதுரை கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை சந்தித்து வாழ்த்து பெறுமாறு யுவராஜிடம் கூறினார்கள்.
இதை நம்பி அவரிடம் வாழ்த்து பெறுவதற்காக நேற்று மதுரை கமிஷ்னர் அலுவலகம் சென்றார். அங்கு உடனடியாக கமிஷ்னர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை சந்திக்கவும் அனுமதி கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்றார் ஆனால் அங்கு யுவராஜின் பேச்சுகள் கமிஷனருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, `ஐ.ஏ.எஸ் எந்த ஆண்டு தேர்வானீர்கள்; தேர்வாணையமான யு.பி.எஸ்.சி குறித்தும் சில கேள்விகளை கமிஷனர் இவரிடத்தில் கேட்டுள்ளார்.
யுவராஜ் கூறிய ஆண்டில் தேர்வான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பட்டியலைக் கமிஷனர் ஆய்வு செய்தபோது, அதில் இவரின் பெயர் இல்லை. தொடர்ந்து, கமிஷனரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் திணறிய யுவராஜ் ,தான் ஐ.ஏ.எஸ் தேர்வானதாகப் பொய் சொன்னதாக உண்மையை ஒப்புக்கொண்டார். போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி தோல்வி அடைந்த யுவராஜ், போலியான ஆவணங்களைத் தயார் செய்து, தனது பெற்றோரையும் ஊரையும் ஏமாற்றியது தற்போது தெரியவந்துள்ளது.