பாதிரியாரின் காம லீலைகள்; பெண் புகார்

வியாழன், 29 ஆகஸ்ட் 2013 (09:06 IST)
FILE
பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் புகார் கொடுத்ததால் பாதிரியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள சந்தோஷபுரத்தில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இங்கு அதே பகுதி விக்னராஜபுரத்தை சேர்ந்த ஜான்சன் என்பவரின் மனைவி ரீட்டாமேரி (வயது 39). என்பவர் விஷேச நாட்களில் உணவு தயார் செய்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஆலயம் சார்பில் வழங்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதி ஆலயத்தில் சாம்பல் புதன் கொண்டாடப்பட்ட போது பக்தர்களுக்கு உணவு கொடுக்கும் பணியில் ரீட்டாமேரி ஈடுபட்டார். இரவு நேரமாகி விட்டதால் சர்ச் பாதிரியார் அமலதாஸ் அவரை மறுநாள் வரச் சொன்னதாக கூறப்படுகிறது.

மறுநாள் பாத்திரங்களை கழுவச் சென்ற போது பாதிரியார் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக ரீட்டா மேரி தனது கணவர் ஜான்சன் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள், பாதிரியார் அமலதாசை எச்சரித்தனர்.

இதன் பின்னர் பாதிரியார் அமலதாஸ், ரீட்டாமேரி குடும்பத்தினரை சர்ச்சில் இருந்து ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. பாதிரியார் அமலதாஸ் இல்லாத நேரங்களில் ரீட்டா மேரி, சர்ச்சிற்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி சர்ச்சுக்கு சென்ற ரீட்டாமேரியை, பாதிரியார் அமலதாஸ் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிரியார் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரீட்டாமேரி புகார் அளித்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி சேலையூர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

அதைதொடர்ந்து சேலையூர் போலீசார், பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்