உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி - தங்கபாலு
வெள்ளி, 16 செப்டம்பர் 2011 (16:20 IST)
''உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது'' என்று அந்த கட்சியின் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன என்பது குறித்து நிர்வாகிகளுடன் கே.வி.தங்கபாலு இன்று சத்யமூர்த்திபவனில் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், சோ.பாலகிருஷ்ணன், யசோதா, ஜே.ஆருண், யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது என்றார்.
12,618 இடங்களிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடிடுகிறது என்று கூறிய தங்கபாலு, வரும் 18ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படுகின்றன என்றும் மனுவை ஒப்படைக்க 20ஆம் தேதி கடைசி நாள் என்றும் கூறினார்.
''மேயர் பதவி விருப்ப மனு கட்டணம் ரூ.10ஆயிரம், நகராட்சி தலைவர் பதவி மனு ரூ.5 ஆயிரம். மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான விருப்ப மனு கட்டணம் ரூ.3ஆயிரம்'' என்று தங்கபாலு தெரிவித்தார்.