தமிழக மீனவர்களின் விசைப்படகும், வலைகளும் கடல் வளத்தை அழிக்கக் கூடியது என்று கூறியுள்ள தென்னிந்திய மீனவர் சங்கங்களின் சம்மேளன ஆலோசகர் விவேகானந்தன், எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுடக்கூடாது என்று இலங்கை அரசிடம் பரிந்துரைக்க உள்ளாம் என்றார்.
'பாக் வளைகுடாவில் இணக்கமான மீன்பிடி தொழில் செய்தல்' என்ற தலைப்பில் இந்திய - இலங்கை மீனவர்களிடையே நேற்று சென்னையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை வரும் 23ஆம் தேதி வரை நடக்கிறது.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தென்னிந்திய மீனவர் சங்கங்களின் சம்மேளன ஆலோசகர் விவேகானந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாக் வளைகுடாவில் மீன் பிடிக்கக்கூடிய மீனவர்கள் அடங்கிய ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த இருதரப்பு மீனவர்களும், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் கலந்து பேச இருக்கிறோம். தமிழகத்தின் சார்பில் 30 பேரும், இலங்கையில் இருந்து 24 பேரும் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் 2 பேர் பார்வையாளர்களாகவும் வந்துள்ளனர். இந்திய அரசின் சார்பிலும் பார்வையாளராக அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இது இரு அரசுகளின் நடவடிக்கை அல்ல, இரு நாட்டு மீனவர்களின் முயற்சி தான். பேச்சுவார்த்தையின் முடிவில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரிவாக விளக்குவோம் என்று விவேகானந்தன் கூறினார்.
இலங்கை குழுவின் தலைவர் சூரியகுமாரன் கூறுகையில், இலங்கையில் கடல் வளத்தை அழிக்கும் எந்தவிதமான தொழிலையும் நாங்கள் செய்வதில்லை என்று முடிவெடுத்து சில மாற்று முறைகளில் மீன் பிடித்து வருகிறோம். தமிழக மீனவர்களின் விசைப்படகும், அதில் பயன்படுத்தும் வலைகளும் கடல் வளத்தை அழிக்கக் கூடியது. எனவே இந்த பேச்சுவார்த்தையில் எங்கள் பகுதியில் தடை செய்யப்பட்ட தொழில்கள் எது? அதை எப்படி தடுப்பது? மேலும் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து பேச இருக்கிறோம்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இதன் மூலம் எடுக்கப்படவுள்ள பரிந்துரைகளை இரு நாட்டு அரசுக்கும் தெரிவிக்க இருக்கிறோம். இரு நாட்டு அரசுகளும் எடுக்கின்ற முடிவில் தான் எங்கள் முடிவும் சார்ந்திருக்கிறது. அதற்கு முன் எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது.
கடல் எல்லையை இலங்கை அரசு நிர்ணயம் செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதை நாம் தடுக்க முடியாது. அதை தடுப்பது இலங்கை அரசு தான். கடல் தான் எங்களை பிரிக்கிறது, எங்கள் உறவு முறையில் பிரிவு இல்லை. எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுடுவதை நிறுத்துங்கள், அவர்களை சட்டரீதியாக நீதிமன்றம் முன் நிறுத்துங்கள் என்றும் நாங்கள் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளோம்.
கச்சத்தீவு முன்பு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்பு ஏற்பட்ட ஒரு ஒப்பந்தம் மூலம் கொடுத்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் பயன்படுத்த முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், ஓய்வு எடுக்கவும் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அதை அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்திய மீனவர்களை எல்லை தாண்டி வாருங்கள் என்று நாங்கள் அழைக்க முடியாது. ஆனாலும் அவர்கள் மீன் பிடிப்பதில் மீனவர்களான எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. மீன் பிடிக்கும் முறை தான், குறிப்பாக விசைப்படகும், அவர்கள் பயன்படுத்தும் வலைகளும் தான் முறையற்றது. அதற்கு இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது என்று சூரிய குமாரன் கூறினார்.