புதிய சட்டப் பேரவை வளாகத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்

சனி, 13 மார்ச் 2010 (18:35 IST)
ஒமந்தூரார் அரசினர் தோட்டம் என்றழைக்கப்படும் பழைய சட்டப் பேரவை உறுப்பினர் தங்கு விடுதி இருந்த இடத்தில் ரூ.450 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தமிழக சட்டப் பேரவை, தலைமைச் செயலகம் ஆகியவற்றிற்கான புதிய வளாகத்தை பிரதமர் ம்ன்மோகன் சிங் திறந்துவைத்தார்.

தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதலமைச்சர் கருணாநிதி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் கே. ரோசையா, கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா ஆகியோர் முன்னிலையில் இன்று மாலை புதிய சட்டப் பேரவை வளாகத்தில் நடந்த விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் திறந்துவைத்தார்.

புதிய பேரவை வளாகம் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர், சோனியா ஆகியோரின் சார்பில் செடிக் கன்றுகள் நடப்பட்ட பின்னர், அவர்களை அழைத்துக் கொண்டு சட்டப் பேரவை வளாகத்தை முதல்வர் கருணாநிதி சுற்றிக்காட்டினார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மின் கலத்தால் இயங்கும் காரில் பிரதமர், சோனியா, முதல்வர் ஆகியோர் அமர்ந்து புதிய வளாகத்தை சுற்றிப் பார்த்தனர்.

1956ஆம் ஆண்டு அரசினர் தோட்டத்தில் இருந்த குழந்தைகள் அரங்கம் என்றழைக்கப்பட்ட - பின்னர் கலைவாணர் அரங்கம் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்ட - கட்டடத்தில் தமிழக சட்டப் பேரவை இயங்கியது. 1957இல் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்கு சட்டப் பேரவை மாற்றப்பட்டது. அங்கு இதுநாள் வரை 53 ஆண்டுகள் அங்கு இயங்கியது.

புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து சட்டப் பேரவை மற்றும் தலைமை செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசின் சார்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

2006ஆம் ஆண்டுவரை முதல்வராக இருந்த ஜெயலலிதா, இராணி மேரி கல்லூரி இருக்குமிடத்தைத் தேர்வு செய்தார். ஆனால் அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. அதன் பிறகு அண்ணா பல்கலைக்கழகம் இயங்கும் இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இறுதியில் சென்னையின் மையப் பகுதியாக உள்ள அரசினர் தோட்டத்திலேயே கட்டுவது என்று முடிவானது.

அதனடிப்படையில், இராஜாஜி மண்டபம் (அட்மிரால்டி ஹவுஸ் என்று முன்பு அழைக்கப்பட்ட மாளிகை), பழைய சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்கும் விடுதி ஆகியன இருந்த இடத்தை தேர்வு செய்து, புதிய தலைமை செயகம், சட்டப் பேரவை ஆகியன ஒரே கட்டடத்தில் இயங்கும் வகையில் இந்தப் புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது என்றாலும், கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்