கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் - காவலர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் காயம் அடைந்தனர். உயர் நீதிமன்றம் தானே இதுதொடர்பாக வழக்கை மேற்கொண்டு விசாரணை செய்தது.
அரசு தெரிவித்த உத்தரவாதம் அடிப்படையில் இந்த சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சி.பி.ஐ. விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், வழக்கறிஞர் சங்கங்களும் மனுதாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இரு உயர் காவல்துறை அதிகாரிகளை தற்காலிக பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை கமிஷனின் இடைக்கால அறிக்கையை வழக்கறிஞர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
WD
மோதல்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா, ஆர்.பானுமதி ஆகியோர் விசாரித்தனர்.
வழக்கறிஞர்கள் தரப்பில் சங்கத்தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர் ஆர்.வைகை உள்பட பலர் ஆஜராகி வாதாடினார்கள். திட்டமிட்டு காவல்துறையினர் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்றும், எனவே சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி வாதாடினார்கள்.
காவல்துறை அதிகாரிகள் தரப்பில் டெல்லி வழக்கறிஞர் ராஜீவ்தவானும், தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனும் ஆஜராகி வாதாடினார்கள்.
வழக்கறிஞர் ராஜீவ்தவான் வாதாடுகையில், காவல்துறையினர் வன்முறையில் ஈடுபடுமாறு எந்த அதிகாரியும் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று வாதாடினார். காவல்துறை அதிகாரிகள் குற்றம்புரியும் உள்நோக்கத்துடன் செயல்படவில்லை என்றும், இதற்காக எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை என்றும் வற்புறுத்தி வாதாடினார். பாதுகாப்பு நலன் கருதியே காவல்துறையினர் உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தனர் என்று அவர் வாதாடுகையில் குறிப்பிட்டார்.
WD
இரு தரப்பிலும் எடுக்கப்பட்ட வீடியோ படங்கள் நீதிபதிகள் முன்பு காண்பிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததால் வழக்கின் தீர்ப்பை கடந்த 7ஆம் தேதி நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.