மீஞ்சூரை அடுத்த வேலூர் கிராமத்தில் சத்யம் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற அனாதை இல்லம் உள்ளது. இந்த அனாதை இல்லத்தை சாது இமானுவேல் என்ற கிறிஸ்தவ பாதிரியார் நடத்தி வந்தார்.
1988ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த அனாதை இல்லத்தில் 10 பெண்கள் வசித்து வருகின்றனர். இதில் இரண்டு பெண்கள் பள்ளி படிப்பை முடித்து விட்டு அனாதை இல்லத்திலேயே தங்கி இருந்தனர். மற்றவர்கள் அருகில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அனாதை இல்லத்தில் வசித்து வந்த இளம் பெண் ஒருவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில், என்னையும், மற்றொரு பெண்ணையும் பாதிரியார் சாது இமானுவேல் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், பாதிரியார் சாது இமானுவேலை கைது செய்தனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இரண்டு பெண்களையும் காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பாதிரியார் சாது இமானுவேல் நடத்தி வந்த அனாதை இல்லத்துக்கு காவல்துறையினர் பூட்டி சீல் வைத்துள்ளனர். அங்கு தங்கி இருந்த குழந்தைகள் அனைவரும் திருவள்ளூரில் உள்ள சமூக நல காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.