மதுரை அழகர் கோயிலில் இன்று அதிகாலை கொள்ளையடிக்க முயற்சி நடந்தது தெரியவந்துள்ளது.
மதுரை அருகே உள்ள அழகர்கோயில் மலையில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருக்கோவில் உள்ளது. சிறந்த சுற்றுலாத் தலமாக திகழும் இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளில் வெள்ளி பொருட்கள் மூலஸ்தானம் செல்லும் பகுதியில் ஒரு அறையில் சூட்கேசில் வைக்கப்பட்டு உள்ளது. தங்க பொருட்கள் லாக்கரில் வைக்கப்படும்.
இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் கோயிலுக்குள் புகுந்து மூலஸ்தானம் பகுதியில் அமைந்து உள்ள அறையில் சூட்கேசை உடைத்து வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு வெளியேறினர். தங்கம் லாக்கரில் இருந்ததால் அவர்களால் அதைக் கைப்பற்ற முடியவில்லை.
வெள்ளிப் பொருட்களுடன் கொள்ளையர் வெளியே வரும்போது கோயில் காவலாளி பாஸ்கரன் பார்த்துவிட்டார். உடனே அவர்களை மடக்கி பிடிக்க முயன்றார். ஆனால் கொள்ளையர்கள் வெள்ளி பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
உடனே பாஸ்கரன் இதுகுறித்து கோயில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். பின்னர் ஊமச்சிகுளம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோயிலுக்கு விரைந்து வந்த காவல்துறையினரும் கைரேகை நிபுணர்களும், 2 நாய்களை மோப்ப நாய்களை வரவழைத்து சோதனை நடத்தினர்.