இலங்கை பிரச்சனையில் தலையிட இந்தியாவுக்கு உரிமை உள்ளது: திருநாவுக்கரசர்
வியாழன், 12 மார்ச் 2009 (17:14 IST)
இலங்கையில் தமிழர்கள் சம உரிமையோடு வாழ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்த பா.ஜ.க. தேசிய செயலர் திருநாவுக்கரசர், லட்சக்கணக்கான அகதிகள் நம் நாட்டில்தான் வாழ்கிறார்கள் என்றும் இதனால் இலங்கை பிரச்சனையில் தலையிட இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை ராணுவம் இறுதி போர் என்ற பெயரில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. ஐ.நா.சபை உள்பட பல வெளிநாடுகள் இலங்கையை கண்டித்து விட்டன. ஆனால் இந்தியா மட்டும் பார்வையாளராக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
உடனடியாக போரை நிறுத்துமாறு இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும். தமிழர்கள் சம உரிமையோடு வாழ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்த வேண்டும். இது இன்னொரு நாட்டு பிரச்சனை அல்ல. லட்சக்கணக்கான அகதிகள் நம் நாட்டில்தான் வாழ்கிறார்கள். எனவே இலங்கை பிரச்சனையில் தலையிட இந்தியாவுக்கு உரிமை உள்ளது.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இந்தியா பலமாக இருந்தது. உலக நாடுகள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. இந்தியாவை நினைத்து இலங்கை செயல்பட்டது. இப்போது இந்தியாவை இலங்கை கண்டு கொள்ளவில்லை.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் எந்தக்கட்சியிலும் கூட்டணி உறுதி ஆகவில்லை. விஜயகாந்த், பா.ம.க. இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை.சமத்துவ மக்கள் கட்சியுடன் பா.ஜனதா கட்சி பேசி வருகிறது. சில கட்சிகள் அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகளிடம் பேசி வருகிறது. அங்கே கூட்டணி முடிவாகி விட்டால் எங்களிடமும் வருவார்கள். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது.
கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நான் அறந்தாங்கி தொகுதியில் 6 முறை வெற்றி பெற்றுள்ளேன். இந்த தொகுதி அடங்கி இருக்கும் ராமநாதபுரத்தில் கட்சி கட்டளையிட்டால் போட்டியிடுவேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அந்த தொகுதி மக்கள் என்னிடம் நல்ல மதிப்பு வைத்துள்ளார்கள். தொகுதிக்குள் இப்போதே தேர்தல் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். 3-வது அணி இந்த தேர்தலில் எடுபடாது, ஆட்சிக்கும் வராது.
பொதுக்கூட்டங்களில் ஆவேசமாக பேசியதை வைத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது தவறானது. பேச்சாளர்களின் இத்தகைய பேச்சால் ரத்தகளறி ஏதும் ஏற்பட போவதில்லை. அரசியல் நோக்கத்தில் பழி வாங்குவதற்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த கூடாது. அதே நேரத்தில் பேச்சாளர்களுக்கும் நிதானம் தேவை. மேடையின் முன்பு இருப்பவர்கள் கைதட்ட வேண்டும் என்பதற்காக எதையாவது பேசக்கூடாது என்று திருநாவுக்கரசர் கூறினார்.