தொகுதிப் பங்கீடு : தி.மு.க- காங்கிரஸ் இன்று பேச்சுவார்த்தை
வியாழன், 12 மார்ச் 2009 (10:08 IST)
மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்று மாலை தொடங்குகின்றன.
தி.மு.க.வில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தொகுதிப் பங்கீட்டுக் குழுவில், அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
காங்கிரஸில் கட்சியின் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் அடங்கிய தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் தங்களுக்குள் முதலில் ஆலோசனை நடத்துகின்றனர்.
பின்னர், தி.மு.க அமைத்துள்ள தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் அந்தக் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்குக் கூடி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளின் நிலை என்ன என்று திட்டவட்டமாகத் தெரியாததால் பேச்சுகள் மெதுவாகத்தான் நடைபெறும் என்று தெரிகிறது. பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளுக்கும் சேர்த்து தொகுதிகளை ஒட்டுமொத்தமாக வாங்கிக் கொண்டு அதைப் பிரித்துத் தரலாம் என்ற கருத்தும் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கிறது.