
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு உள்ளதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவை ஒன்றிணைக்கப்போவதாக பேசி வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தேவர் குருபூஜை அன்று டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை கட்சியை விட்டு நீக்குவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதுகுறித்து கோபிசெட்டிப்பாளையத்தில் பேட்டியளித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை பலவாறாக விமர்சித்து பேசினார். அப்போது அவர் ”என்னை திமுகவின் பி டீம் என்று கூறியுள்ளனர். யார் பி டீம் என்பதை நாடறியும். நான் பி டீமில் இல்லை. ஏ1 ஆக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஏ1 ஆகவே செயல்பட்டு வருகிறார். கோடநாடு கொலைவழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளது.
துரோகம் செய்வதில் எடப்பாடி பழனிசாமிக்கு நோபல் பரிசு தரலாம். சசிக்கலாவிடம் இருந்து அவர் எப்படி முதலமைச்சர் பதவியை பெற்றார் என எல்லாருக்கும் தெரியும். தற்காலிக பொதுச்செயலாளரே, 53 ஆண்டுகளாக தீவிர உறுப்பினராக இருந்த என்னையே நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.