
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்குவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தான் கட்சியை விட்டு நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன் வேதனையுடன் பேசியுள்ளார்.
முன்னதாக தேவர் ஜெயந்தியின்போது டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களோடு செங்கோட்டையன் சென்று அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டதே இந்த கட்சியை விட்டு நீக்கிய நடவடிக்கைக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசியுள்ள செங்கோட்டையன் “1975-ல் கோவையில் நடைபெற்ற அதிமுகவின் முதல் பொதுக்குழுவில் பங்கேற்றேன். பொதுக்குழுவைச் சிறப்பான முறையில் நடத்தியதற்காக எம்.ஜி.ஆரிடம் பாராட்டுகளைப் பெற்றவன்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கான பரிந்துரைக் கடிதத்தை எல்லோரிடமும் ஒப்புதல் பெற்றவன் நான். ஜெயலலிதா இறப்புக்கு பிறகு எல்லோரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
கட்சி உடைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன், எனக்கு 2 முறை வந்த வாய்ப்புகளைக் கூட விட்டுக் கொடுத்தேன். அனைவரையும் ஒன்றிணைக்கும் கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால்தான் கடந்த 5ம் தேதி மனம் திறந்து பேசினேன். தொடர் தோல்வியால்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அனைவரையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு வருவதற்கு முன்பே நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் நான்.கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K