கதாநாயகி நடிகை காமெடி நடிகையாக ஆகிவிட்டார் : ஜெயலலிதா மீது கருணாநிதி கடும் தாக்கு
புதன், 11 மார்ச் 2009 (20:07 IST)
இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா இருந்த உண்ணாவிரதத்தை உலகமே வரவேற்கிறதாம் என்றும் நான் கதிகலங்கி விட்டேனாம் என்றும் ஜெயலலிதா செல்கிறார் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் கருணாநிதி, என்ன செய்வது “கதாநாயகி நடிகை” காமெடி நடிகையாக ஆகிவிட்டார் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2008-ம் ஆண்டு போர் தீவிரமடைந்த போது வேடிக்கை பார்த்த மத்தியஅரசு, நான் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று அறிந்தவுடன், அதே நாளில் இலங்கைத் தமிழர்களுக்கு 25 டன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் விமானம் மூலம் அவசரம் அவசரமாக அனுப்பியுள்ளது.-ஜெயலலிதா அறிக்கை.
2008-ம் ஆண்டு போர் தீவிரமடைந்த போது வேடிக்கை பார்த்த மத்திய அரசு என்று கூறும் ஜெயலலிதா, 2008-ம் ஆண்டு போர் தீவிரமடைந்த போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்? 2008-ம் ஆண்டிலிருந்து தூங்கி விட்டு, இப்போது தேர்தல் வருகிறது என்றதும், அவசரம் அவசரமாக 2009 ஆம் ஆண்டிலேதானே அவரே உண்ணாவிரதம் இருக்க முன் வந்திருக்கிறார்.
அது மாத்திரமல்ல, ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார் என்றவுடன், உடனடியாக 25 டன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தயார் செய்து, விமானமும் ஏற்பாடு செய்து அன்றைய தினமே ஒரு அரசின் சார்பில் அனுப்புவது என்பது சாத்தியக் கூறான காரியமா? ஜெயலலிதா இவ்வாறு தன்னால்தான் என்று கூறிக் கொள்வது நல்ல நகைச்சுவையாக இல்லையா? இதற்கு முன்பே இலங்கைப் பிரச்சனைக்காக மத்திய வெளி உறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்கு ஒரு முறை வந்ததும், அதன் பிறகு அனைத்துக் கட்சி தலைவர்கள் என் தலைமையில் டெல்லி சென்று பிரதமரைப் பார்த்து, பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து, அவர் இலங்கை செல்வதில் தாமதம் ஏற்பட்டதால், தமிழகச் சட்டபேரவையில் இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பில் நானே ஒரு தீர்மானத்தை முன் மொழிந்து அனுப்பிய பிறகு, பிரணாப்முகர்ஜி இலங்கைக்கு சென்றதும், அதன் பிறகு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதும்-எல்லாமே எப்படி நடந்தது? அவருடைய உண்ணாவிரதத்திற்குப் பிறகு தான் மத்திய அரசு செயல்பட்டது என்றால் இவ்வளவு காரியங்களும் நடக்க யார் காரணம்? ஜெயலலிதா ஓய்வெடுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது தானா?
மேலும் ஜெயலலிதா அவரது அறிக்கையில் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டதன் காரணமாக-மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு இந்த உதவியை இப்போதாவது செய்திருக்கிறது என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டிருக்கிறார்.
மத்திய அரசுதான் நேற்றைய தினம் மருந்து பொருட்களை அனுப்பியது. தமிழக அரசின் சார்பில் ஜெயலலிதா தூங்கிக் கொண்டிருந்த நாட்களில் - 2008-ம் ஆண்டு நவம்பர் திங்களிலேயே முதல் கட்டமாக 2000 டன் எடையுள்ள அரிசி, பருப்பு, டீத்தூள், சர்க்கரை போன்ற உணவுப் பொருட்கள், குளிக்கும் சோப்பு, துவைப்பதற்கான சோப்பு, பற்பசை, வேட்டி, கைலி, சேலை, பெண்கள் அணியும் ஆயத்த ஆடை, துண்டுகள் மற்றும் படுக்கை விரிப்புகள் ஆகிய நிவாரணப் பொருட்கள் சுமார் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக தனித்தனியே சிப்பங்களாக அனுப்பி வைக்கப்பட்டதே, அதற்கெல்லாம் ஜெயலலிதா தான் காரணமா? இவர் மார்ச் 2009-ல் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு, உண்ணாவிரதம் இருப்பார் என்று தெரிந்து கொண்டு செய்யப்பட்டக் காரியமா?
ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க ஆயத்தமே செய்யாமல் இருந்தபோது தான் 22.2.2009 அன்று பிரதமருக்கு நான் அவசரக் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில், இலங்கையில் தற்போது நிலைமை மிகவும் அபாயகரமான கட்டத்தில் உள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அனைவரும் உடனடியாக மறுவாழ்வு உதவிகள் செய்ய வேண்டும். மனிதாபிமான அடிப்படையிலாவது இலங்கைக்கு உடனடியாக மத்திய அரசு மருத்துவ உதவிகளை அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு எடுக்கும் இவ்வகை நடவடிக்கைக்கு தமிழக அரசு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிடவும், அனுபவ மிக்க மருத்துவர்களையும் தேவையான மருந்து பொருட்களையும் மருத்துவ உபகரணங்களையும் அனுப்பி வைக்கவும் தயாராக இருக்கிறது என்று எழுதியுள்ளேன். அது ஏடுகளிலும் வந்துள்ளது.
இன்னும் சொல்லப்போனால் இந்த 2000 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்டு, கப்பலிலே செல்லக் காத்திருந்த நேரத்தில் நானே நேரில் சென்று இவைகளையெல்லாம் பார்த்தேன். அப்போது செஞ்சிலுவை சங்கத்தின் பன்னாட்டுக் குழுமத்தின் அலுவலர் தாமஸ் ரீஸ் என்பவரும், மத்திய அரசின் வெளி உறவுத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஐ.எம்.பாண்டேவும், தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் உடன் இருந்தார்கள். அந்த நிவாரணப் பொருட்களை நேரில் பார்த்த தாமஸ் ரீஸ், அந்தப் பொருட்கள் எல்லாம் நல்ல தரமுடன் உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்து, அந்தச் செய்தி அப்போதே ஏடுகளில் வெளி வந்தது. இந்த நிவாரணப் பொருட்கள் 100 கண்டெய்னர்களில் சுங்க அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின் ஏற்றப்பட்டு 13.11.2008 அன்று இரவு சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, 15.11.2008 அன்று காலை 7 மணி அளவில் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது.
அந்தப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்ததோடு மாத்திரமல்லாமல், அவைகள் முறையாகவும், ஒழுங்காகவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட தொடர்ந்து மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, அவர்கள் இலங்கையிலே உள்ள இந்தியத் தூதரகத்தோடு தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை யெல்லாம் செய்து - அந்தப் பொருட்கள் முறையாக விநி யோகிக்கப்படுவதாகவும், தமிழர்கள் அதனைப் பெற்றுச் செல்கிறார்கள் என்றும் ஏடுகளில் எல்லாம் செய்தி வந்தபோது ஜெயலலிதா எந்த உலகத்திலே இருந்தார்?
யாழ்ப்பாணம் பிஷப் டாக்டர் தாமஸ் சவுந்தரநாயகம் எழுதிய கடிதத்தில், இந்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்ட பொட்டலங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைத்தது. ஒரு வாரத்திற்குத் தேவையான பொருள்கள் அதில் இருந்தன. சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. தமிழக மக்களிடமிருந்து போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் வந்த இந்த நன்கொடை பொருள்களை இலங்கைத் தமிழர்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர். தமிழகத்திலிருந்து மக்களுக்கு விநியோகிக்கப்படுவதற்காக அனுப்பப்பட்ட துணிகளைக் கொண்ட லாரிகள் வரிசையாகச் சென்று கொண்டிருந்ததை நானே நேரில் கண்டேன். கடைகளின் மூலமாக வாங்குவதற்கு வசதியற்ற நிலையிலே உள்ள மக்களுக்கு இவை அனைத்தும் மிகவும் தேவையானவையாகும் என்று தெரிவித்து நாளேடுகளில் வந்ததை ஜெயலலிதா எப்போதும் போல படிக்கவில்லையா?
இலங்கை தமிழர்களுக்காக நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதற்கு தமிழக மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல், உலக அளவில் வரவேற்பு இருப்பதைக் கண்டு கருணாநிதி கதி கலங்கி ஆடிப்போயிருப்பதையே அவருடைய அறிக்கை உணர்த்துகிறது. -ஜெயலலிதா ஆம். கதி கலங்கித்தான் போய் விட்டேன். உலக அளவில் வரவேற்போம். முதலில் இப்படித் தான் உலகஅளவில் தனக்கு விருது கொடுப்பதாக ஒரு புரளியைக் கிளப்பினார். நல்ல வேளை, ஒபாமாவும், கார்டன் பிரவுனும் தன்னை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்கள் என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஏதோ இரண்டு இடங்கள் நாடாளுமன்றத்தேர்தலில் கிடைக்கும் என்பதற்காக இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும், விடு தலைப்புலிகள் பற்றி ஜெயலலிதாவிற்கு நேர் எதிரான கொள்கையுடைய வைகோவும் அந்த உண்ணாவிரதத்தை வரவேற்று விட்டார்கள் என்றதும், உலகமே வரவேற்கிறதாம். நான் கதிகலங்கி விட்டேனாம். என் செய்வது? “கதாநாயகி நடிகை” காமெடி நடிகையாக ஆகிவிட்டார். கஷ்டகாலம்.
உண்டியல் மூலம் வசூலான நிதி அனைத்தும் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, வசூலான மொத்தப் பணத்திற்கும் வரைவோலை எடுக்கப்பட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்படும். -ஜெயலலிதா அறிக்கை.
அமெரிக்காவிலிருந்து யாரோ வரைவோலை அனுப்பினார்கள் என்றும், யார் அனுப்பியது என்றே தனக்கு தெரியாது என்றும், இருந்தாலும் அதனை தன் கணக்கிலே வரவு வைத்துக் கொண்டதாகவும் உலகத்திற்கு சொன்ன யோக்கிய சிகாமணி அல்லவா ஜெயலலிதா- தனிப்பட்ட ஒரு நபரோ, ஒரு நிறுவனமோ வெளி நாட்டில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்ய செஞ்சிலுவை சங்கம் மூலமாக மத்திய அரசின் அனுமதியில்லாமல் எந்தத் தொகையும் அனுப்ப இயலாது என்ற உண்மையைக்கூட தெரிந்து கொள்ளாமல், இவர் அறிக்கை விடுத்து உண்டியல் வசூல் செய்துள்ளார். எப்படியோ போகட்டும். நாம் அரசின் சார்பாக தொகையாக கூட அல்ல, வரைவோலை மூலமாக நிதி திரட்டிய போது, அதனை ஏதோ என் குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டதாக அறிக்கை விட்டு விட்டு, தற்போது அவரே உண்டியல் வைத்து நிதி சேர்ப்பது முறைதானா தான் என்று நாம் கேட்டிருந்தோம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.