நாங்கள் கேட்பதெல்லாம் போர் நிறுத்தம்தான்: தா.பாண்டியன்
திங்கள், 9 மார்ச் 2009 (13:02 IST)
நாங்கள் போராடுவதெல்லாம் இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் போராட்டம், இலங்கைத் தமிழர்களுக்கு மருந்து கிடைக்கிறதோ இல்லையோ, மன ஆறுதலை தரும் என்றார்.
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வரும் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியன் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசுகையில், நாங்கள் போராடுவதெல்லாம் இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்பதற்காகத்தான். இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். போரை நிறுத்த இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும். இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க யாரும் தீக்குளிக்க வேண்டாம். வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இது நல்ல பாதை இல்லை. இலங்கைத் தமிழர்கள் செய்த குற்றம் அந்த மண்ணில் பிறந்ததுதான்.
நீங்கள் (ஜெயலலிதா) இருக்கும் உண்ணாவிரதப் போராட்டம், இலங்கைத் தமிழர்களுக்கு மருந்து கிடைக்கிறதோ இல்லையோ, மன ஆறுதலை தரும் என்று தா.பாண்டியன் பேசினார்.