காங்கிரசுக்கு ஆலோசனைதான் கூறினேன்; கூட்டணிக்கு அழைக்கவில்லை: கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்
வியாழன், 5 மார்ச் 2009 (13:21 IST)
நீண்டகால நட்பை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சி புதைமண்ணில் மாட்டிக் கொண்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், தி.மு.க. கூட்டணியில் இருந்து வந்து சேர வேண்டும் என்று ஆலோசனை கூறினேனே தவிர எங்கள் கூட்டணியில் வந்து சேர வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கவில்லை என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு நான் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அ.இ.அ.தி.மு.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள நீண்டகால நட்பை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சி புதை மண்ணில் மாட்டிக் கொண்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், தி.மு.க. கூட்டணியில் இருந்து வந்து சேர வேண்டும் என்று ஆலோசனை கூறினேனே தவிர எங்கள் கூட்டணியில் வந்து சேர வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கவில்லை என்பதை முதலில் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
"இலங்கையிலே உள்ள தமிழர்கள் காப்பாற்றப்பட்டே ஆக வேண்டுமென்ற குறிக்கோளில் ஒரு குன்றிமணி அளவுக்குக்கூட என்றைக்கும் காங்கிரசுக்கும், தி.மு.க.விற்கும் இடையே வேறுபாடோ, மாறுபாடோ இருந்ததில்லை'' என்று கருணாநிதி கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.
அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் கட்சி மேலிடம் பரிசீலிக்க வேண்டும் என காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களும், மாநில நிர்வாகிகளும் குலாம் நபி ஆசாத்திடம் வற்புறுத்தினர் என்ற உண்மைச் செய்தியை அனைத்து நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன. ஆனால், கருணாநிதியோ தன்னுடைய அறிக்கையில், இது போன்ற செய்தியை அ.இ.அ.தி.மு.க. கடும் முயற்சி செய்து வெளியிட்டதாகக் கூறியிருக்கிறார்.
மறைந்த பிரதமர் இந்திராகாந்தி மதுரைக்கு வந்தபோது அவருக்கு கருப்புக்கொடி காட்டி, அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்த காரணமாக இருந்த கருணாநிதி, பெருந்தலைவர் காமராஜரை 'அண்டங் காக்கை' என்றும் பேரிச்சம் பழம் விற்கிறவர் என்றும், சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்பவர் என்றும் கேலி செய்த கருணாநிதி, விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் கேட்டு இந்திராகாந்தி விண்ணப்பித்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கிண்டல் செய்த கருணாநிதி, விமானம் ஓட்டத் தெரியாதவர் நாட்டை ஆள்வது எப்படி என்றும், பிரதமராக இருப்பதற்கு லாய்க்கற்றவர் என்றும், அனுபவ முதிர்ச்சியற்றவர் என்றும், ஊழல்களை மறைப்பதற்காக வி.பி.சிங்கை பந்தாடியவர் என்றும், சாவுக்கு ஓட்டு வாங்கி ஆட்சியை பிடித்தவர் என்றும் ராஜீவ்காந்தி விமர்சித்த கருணாநிதி,
இவை அனைத்தையும் மறைத்து விட்டு,"தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு'' என்ற திருக்குறளை காங்கிரசார் மறந்திருக்க நியாயமில்லை என்று தனது அறிக்கையில் கருணாநிதி கூறியிருப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று காங்கிரஸ் தொண்டர்கள் குமுறுவது கருணாநிதியின் காதுகளுக்கு இன்னும் எட்டவில்லை போலும்!
ராஜீவ்காந்தி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீதும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனை சேதப்படுத்தியவர்கள் மீதும், அங்கு உள்ள காங்கிரஸ் தொண்டர்களை தாக்கியவர்கள் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் கருணாநிதி எடுக்கவில்லையே என்று காங்கிரஸ் தொண்டர்கள் கேட்பது கருணாநிதியின் செவிகளுக்கு எட்டவில்லை போலும்! தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் திருமாவளவனை கைது செய்யாமல், காங்கிரஸ் மேலிடத்தை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக சீமான், கொளத்தூர் மணி போன்ற ஒரு சிலரை மட்டும் கைது செய்து கண்துடைப்பு நாடகத்தை நிறைவேற்றியிருப்பது துரதிருஷ்டவசமானது.
கடுமையான மின்வெட்டு, விண்ணை மூட்டும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், மந்தமான பொருளாதார சூழ்நிலை, விவசாய உற்பத்தியின்மை, தொழில் சரிவு போன்ற பல்வேறு தீர்க்க முடியாத பிரச்சனைகள் காரணமாக தமிழக மக்கள் தி.மு.க. அரசின் மீது கடுங்கோபத்தில் உள்ளனர்.
எனது ஆட்சிக்காலத்தில் அமைதிப்பூங்காவாக விளங்கிய தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக இன்று காட்சி அளிக்கிறது. இதை மனதில் வைத்துத்தான், தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளிவர வேண்டும் என்று நான் ஆலோசனை கூறியிருந்தேன். ஆனால், மக்களே ஆச்சரியப்படும் அளவுக்கு, தி.மு.க- காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து இருப்பதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வு, கடுமையான மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீரழிவினால் பாதுகாப்பின்மை ஆகியவற்றை நாட்டு மக்களுக்கு பரிசாக தந்து விட்டு, ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்ட பல இமாலய ஊழல்கள் புரிந்து, லட்சக்கணக்கான கோடி ரூபாய் அளவில் ஊழல் பணத்தை சேர்த்துக்கொண்டு நாட்டைச் சுரண்டி எடுப்பதில் இரு கட்சிகளுக்கிடையே ஒத்த கருத்து இருப்பதைத்தான் இது காட்டுகிறது. அதனால் தான் தி.மு.க.-வை விட காங்கிரசிற்கு மனமில்லை, காங்கிரசை விட தி.மு.க.விற்கு மனமில்லை போலும்!
நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களித்த தயாராகி விட்டார்கள் என்பதையும், தேர்தல் முடிவிற்குப் பிறகு இதை காங்கிரஸ் கட்சி நிச்சயம் உணரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.