நதிகளை இணைப்பதில் ஒருமித்த கருத்து: கருணாநிதி

ஞாயிறு, 22 பிப்ரவரி 2009 (13:19 IST)
நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகளுக்கு நதிகளை இணைப்பதுதான் தீர்வாக அமையும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

திருநெல்வேலியில் நேற்று 369 கோடி ரூபாய் மதிப்பில் தாமிரபரணி - கருமேனி ஆறு - நம்பி ஆறு ஆகியவற்றை இணைக்கும் திட்டத்தின் தொடக்க விழா சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

சென்னையில் மருத்துவமனையில் இருந்தபடியே இந்த இணைப்புத் திட்டத்தை வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் கருணாநிதி தொடங்கி வைத்து பேசினார்.

நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் நீர் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்க தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக மாநிலங்களுக்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டத்தையாவது செயல்படுத்தவேண்டும் என தாம் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்ததையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தாமிரபரணி, கருமேனி ஆறு மற்றும் நம்பி ஆறுகளை இணைக்கும் திட்டத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன தேவைகள் தீர்க்கப்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மத்திய உள்துறை இணையமைச்சர் ராதிகா செல்வி, மாநில அமைச்சர்கள் மைதீன்கான், கீதா ஜீவன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்