உயர்நீதிமன்ற மோதல்: காவல் ஆணையருக்கு உத்தரவு

ஞாயிறு, 22 பிப்ரவரி 2009 (11:38 IST)
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வியாழனன்று காவல்துறையினர் தடியடி நடத்துவதற்கு உத்தரவிட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் பதவி விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பொதுநல வழக்காக தாமாகவே முன்வந்து எடுத்துக் கொண்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் முகோபாத்யாயா இல்லத்தில் நேற்று நடத்தியது.

காவல்துறையினரின் தடியடியில் நீதிமன்றங்கள் பலத்த சேதம் அடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், யாரிடம் அனுமதி பெற்று போலீசார் நீதிமன்றத்திற்குள் நுழைந்தனர் என்பதை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்களை பார்க்கும்போது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என தாங்கள் கருதுவதாகவும், இருப்பினும் இதற்கு காரணமானவர்கள் யார் யார் என்ற விவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகே இதுபற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்